அசாமில் பிப்ரவரி 18 ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி `மஹாபாகு-பிரம்மபுத்ரா' திட்டத்தைத் தொடங்கி வைத்து, தூப்ரி புல்பாரி பாலத்துக்கு அடிக்கல் நாட்டி, மஜுலி பாலத்திற்கான பூமி பூஜையில் பங்கேற்கிறார். பகல் 12 மணிக்கு காணொலி மூலமாக இந்த நிகழ்ச்சிகளில் பிரதமர் பங்கேற்கிறார். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் தடங்கள் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் அசாம் முதல்வர் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
மஹாபாகு-பிரம்மபுத்ரா திட்டம்
நியமட்டி - மஜுலி தீவுகளுக்கு இடையில், வடக்கு குவகாத்தி - தெற்கு குவகாத்தி இடையில், தூப்ரி - ஹட்சிங்கிமரி இடையில் ரோ-பாக்ஸ் சேவையைத் தொடங்கி வைப்பதன் மூலம் `மஹாபாகு-பிரம்மபுத்ரா' திட்டத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். ஜோகிகோப்பாவில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையத்துக்கான பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்கிறார். பிரம்மபுத்ரா நதியில் பல்வேறு சுற்றுலா இறங்கு தளங்களுக்கான பணிகளை தொடங்கி வைத்து, தொழில் செய்வதை எளிதாக்குவதற்கான டிஜிட்டல் வழிமுறை வசதிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் தடையற்ற போக்குவரத்து இணைப்பு வசதி கிடைக்கச் செய்யும் நோக்கில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரம்மபுத்ரா மற்றும் பரக் நதிக் கரைகளை ஒட்டி வாழும் மக்களுக்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களும் இதில் அடங்கும்.
நதிக் கரைகளுக்கு இடையில் பயண நேரத்தைக் குறைப்பதாக ரோ-பாக்ஸ் சேவைகள் இருக்கும். சாலை வழியாகச் செல்லும் நேரத்தைக் குறைப்பதாக இது இருக்கும். நியமட்டிக்கும் மஜுலிக்கும் இடையில் 420 கிலோ மீட்டர் பயண தூரம் இப்போது 12 கிலோ மீட்டர்களாகக் குறையும். இதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள சிறுதொழில் நிறுவனங்கள் தங்களின் உற்பத்திப் பொருட்களைக் கொண்டு செல்வதற்கான செலவுகள் குறையும். உள்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்ட இரண்டு ரோ-பாக்ஸ் கப்பல்கள், எம்.வி. ராணி காய்டின்லியு, எம்.வி. சச்சின் தேவ் பர்மன் ஆகிய கப்பல்கள், அப்போது செயல்பாட்டுக்கு வரும். வடக்கு மற்றும் தெற்கு குவகாத்திக்கு இடையில் எம்.வி. ஜே.எப்.ஆர். ஜேக்கப் ரோ-பாக்ஸ் இயக்கப்படுவதால், 40 கிலோ மீட்டர் பயண தூரம், வெறும் 3 கிலோ மீட்டர்களாகக் குறையும். தூப்ரிக்கும் ஹட்சிங்கிமரிக்கும் இடையில் எம்.வி. பாப் காத்திங் கப்பல் இயக்கப்படுவதால் 220 கிலோ மீட்டர் தூர பயணம், 28 கிலோ மீட்டராகக் குறையும். பயண தூரம் குறைவதால், பயண நேரமும் குறைகிறது.
நியமட்டி, விஸ்வநாத் மலைப் பகுதி, பாண்டு, ஜோகிகோபா ஆகிய நான்கு இடங்களில் சுற்றுலாவாசிகளுக்கான இறங்குதளங்கள் அமைப்பதற்கு பூமிபூஜை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. சுற்றுலா அமைச்சகத்தின் மூலம் ரூ.9.41 கோடி நிதி உதவியுடன் இத் திட்டங்கள் நிறைவேற்றப் படுகின்றன. ஆற்றுவழிப் பயண சுற்றுலாவை மேம்படுத்துவதாக இந்த இறங்குதளங்கள் அமைந்து, உள்ளூர் பகுதியில் வேலைவாய்ப்புகளைப் பெருக்கி, அந்தப் பகுதி வணிகத்தை மேம்படுத்துவதற்கு உதவும்.
இத் திட்டத்தின் கீழ் ஜோகிகோபாவில் நிரந்தர உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முனையம் உருவாக்கப்படும். ஜோகிகோபாவில் உருவாகி வரும் பன்முக போக்குவரத்து வசதி இணைப்பு கொண்ட சேமிப்பு வளாகத்துடன் இந்த முனையத்துக்கும் போக்குவரத்து வசதி உருவாக்கப்படும். சிலிகுரி பெருவழித்தடத்தில் கொல்கத்தா மற்றும் ஹால்டியாவை நோக்கிய பயணத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இந்த முனையம் உதவிகரமாக இருக்கும். வெள்ள பாதிப்பு காலத்திலும் மேகாலயா, திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களுக்கும், பூட்டான், வங்கதேச நாடுகளுக்கும் சரக்குப் போக்குவரத்தை தடையின்றி இயக்க இது உதவியாக அமையும்.
தொழில் செய்வதை எளிதாக ஆக்கும் வகையில் இரண்டு இணையதளங்களையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். Car-D (சரக்கு தகவல்) முனையம், சரக்கு மற்றும் நீர்வழிப் பயணத்தில் தற்போதைய நிலை குறித்த தகவல்களை அளிப்பதாக இருக்கும். PANI (சொத்து மற்றும் கடல் பயணத்துக்கான தகவல் அளிக்கும் முனையம்) ஆற்றுவழிப் பயணம் மற்றும் கட்டமைப்பு குறித்த தகவல்களை ஒரே இடத்தில் அளிப்பதாக இருக்கும்.
தூப்ரி புல்பாரி பாலம்
பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே தூப்ரிக்கும் (வடக்கு கரையில் உள்ள இடம்) புல்பாரிக்கும் (தெற்கு கரையில் உள்ள இடம்) இடையில் நான்குவழி பாலம் கட்டுவதற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தப் பாலம் தேசிய நெடுஞ்சாலை எண் 27-ல் (கிழக்கு - மேற்கு பெருவழி) தொடங்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 127 B -யில் இந்தப் பாலம் அமையும். இது மேகாலயாவில் தேசிய நெடுஞ்சாலை எண் 106-ல் சென்று சேரும். அசாமில் தூப்ரியில் இருந்து மேகாலயாவில் புல்பாரி, டுரா, ரோங்கிராம், ரோங்ஜெங் நகரங்களை இணைப்பதாக இது இருக்கும்.
சுமார் ரூ.4997 கோடி செலவில் கட்டப்படும் இந்தப் பாலம், அசாம் மற்றும் மேகாலயா மக்களின் நீண்டகால கோரிக்கையைப் பூர்த்தி செய்வதாக அமையும். இப்போது ஆற்றின் இரு கரைகளுக்கு இடையில் பயணிக்க அந்த மக்கள் பரிசல் சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். சாலை வழியாக சென்றால் 205 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டிய தொலைவை இது 19 கிலோ மீட்டராகக் குறைத்துவிடும். இந்தத் தொலைவு முழுக்கவே பாலமாக இருக்கும்.
மஜுலி பாலம்
பிரம்மபுத்ராவின் குறுக்கே மஜுலிக்கும் (வடக்கு கரையில் உள்ள இடம்) ஜோர்ஹாட்டுக்கும் (தெற்கு கரையில் உள்ள இடம்) இடையில் இரு வழி பாலத்துக்கான பூமி பூஜையில் பிரதமர் பங்கேற்கிறார்.
தேசிய நெடுஞ்சாலை எண் 715 K-ல் அமையும் இந்தப் பாலம் ஜோர்ஹட் பகுதியில் நீமட்டிகாட் மற்றும் மஜுலி பகுதியில் கமலபாரி பகுதிகளை இணைப்பதாக இருக்கும். இந்தப் பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என்பது மஜுலி மக்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்து வருகிறது. அசாமின் பிரதானப் பகுதிகளுக்குச் செல்வதற்கு இந்த மக்கள் பல தலைமுறைகளாக பரிசல் சேவையை மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.