பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னாவை செப்டம்பர் 10 ஆம் தேதி பிரதமர் திரு. நரேந்திர மோடி டிஜிட்டல் நுட்பம் மூலம் தொடங்கி வைக்கிறார். விரிவான கலப்பின மேம்பாட்டு வர்த்தக வசதி மற்றும் பிரதமர்:விவசாயிகள் நேரடி பயன்பாட்டுக்கான இ-கோபாலா ஆப் தொடங்கி வைக்கிறார். பிகாரில் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளில் வேறு பல முன்முயற்சிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
பிகார் மாநில ஆளுநர், முதல்வர் ஆகியோரும், மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பொருள் துறை அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் ஆகியோரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா
நாட்டில் மீன்வளத் துறையில் ஒருமித்த கவனம் செலுத்தி மற்றும் நீடித்த வளர்ச்சி காண்பதற்கான முன்னோடித் திட்டமாக பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா இருக்கும். 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு ரூ.20,050 கோடி முதலீட்டில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். தற்சார்பு இந்தியா தொகுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இத் திட்டம் அமல்படுத்தப்படும். மீன்வளத் துறையில் ரூ.20,050 கோடி செலவிடப்படுவது, இதுவே அதிகபட்ச அளவாக இருக்கும். இதில் கடல்சார், உள்நாட்டு மீனவர் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு சார்ந்த செயல்பாடுகளில் பயனாளிகள் சார்ந்த நடவடிக்கைகளுக்காக ரூ.12340 கோடி செலவிடப்படும். மீன்வளத் துறை கட்டமைப்புக்காக ரூ.7710 கோடி செலவிடப்படும்.
2024-25 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 70 லட்சம் டன் அளவுக்கு மீன் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இத் திட்டம் உருவாக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் 2024-25ல் மீன்வளத் துறையின் ஏற்றுமதி ரூ.1,00,000 கோடியளவுக்கு இருக்கும். மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்களுக்கு வருவாய் இரட்டிப்பாகும். மீன்களைப் பிடித்த பிறகு ஏற்படும் இழப்புகளை 20-25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்படும். மீன்வளத் துறை மற்றும் அதைச் சார்ந்த செயல்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் கூடுதலாக 55 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
மீன் உற்பத்தி, தரம், தொழில்நுட்பம், உற்பத்தி நிலை, மீன் பிடித்த பிறகு கையாள்வதற்கான கட்டமைப்பு மற்றும் மேலாண்மை, நவீனப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டு சங்கிலியை பலப்படுத்துதல், தடமறிதல், மீன்வள மேலாண்மை கட்டமைப்பை உடனுக்குடன் மேற்பார்வை செய்தல் மற்றும் மீனவர்களின் நலன் ஆகிய அம்சங்களில் உள்ள குறைபாடுகளைத் தீர்ப்பதாக இது இருக்கும். நீலப் புரட்சித் திட்டத்தின் சாதனைகளை உறுதிப்படுத்தும் அதேசமயத்தில், மீன்பிடி கலன் காப்பீடு, மீன்பிடி கலன் / படகுகளை புதிதாக வாங்குதல் / தரம் உயர்த்துதலுக்கு உதவி, பயோ டாய்லெட்கள், உப்பு / உவர்நிலப் பகுதிகளில் நீர்வாழ் உயிரின வளர்ப்பு, சாகர் மித்ராக்கள், எப்.எப்.பி.ஓ.கள்/சி.கள், தாய் கருவாக்கல் மையங்கள், மீன்வளம் மற்றும் நீர்வள உயிரின வளர்ப்பு ஸ்டார்ட் அப்கள், தொடக்க நிலை முயற்சிகள், ஒருங்கிணைந்த அக்குவா பூங்காக்கள், ஒருங்கிணைந்த மீன்பிடி கிராமங்கள் வளர்ச்சி, நீர்வாழ் உயிரின ஆய்வகங்கள் நெட்வொர்க் மற்றும் விரிவாக்க சேவைகள், தடமறிதல், சான்றளித்தல் மற்றும் அங்கீகாரம் பெறுதல், ஆர்.ஏ.எஸ்., பயோபிளாக் & கூண்டு முறை, இ-டிரேடிங் / மார்க்கெட்டிங், மீன்வள மேலாண்மைத் திட்டங்கள் போன்றவற்றில் புதிய முயற்சிகளை எடுக்கவும் இத் திட்டம் வகை செய்கிறது.
`தொகுப்பு அல்லது அந்தப் பகுதி சார்ந்த அணுகுமுறைகளில்' இத் திட்டம் முதன்மையாக கவனத்தைச் செலுத்தும். கழிமுகப் பகுதிகள் மற்றும் தண்ணீர் செல்லும் தொடர்புப் பகுதிகள் மூலம் மீன்வள தொகுப்புப் பகுதிகள் உருவாக்கப்படும். கடற்பாசி சேகரித்தல் மற்றும் அலங்கார மீன்கள் வளர்ப்பு போன்ற செயல்பாடுகள் மூலம் வேலைவாய்ப்புகள் உருவாக்க சிறப்பு கவனம் செலுத்தப்படும். தரமான மீன்குஞ்சுகள் உற்பத்தி, தீவனம் அளித்தல், இனங்கள் பரவலாக்கத்தில் சிறப்பு கவனம், முக்கியமான கட்டமைப்பு வசதிகள், சந்தைப்படுத்தல் தொடர்புகள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
இப்போதைக்கு, முதல்கட்டமாக இத் திட்டத்தின் கீழ் 21 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் ரூ.1723 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மீன்வளத் துறை அனுமதி அளித்துள்ளது. வருவாய் உருவாக்கும் திட்டங்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப் பட்டுள்ளது.
பிகாரில் இத் திட்டத்தில் ரூ.1390 கோடி முதலீடு செய்யப்படுகிறது. அதில் மத்திய அரசின் பங்கு ரூ.535 கோடியாக இருக்கும். இதனால் கூடுதலாக 3 லட்சம் டன் மீன் உற்பத்தி கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. நடப்பு நிதியாண்டில் (2020-21) பிகாரில் மறுசுழற்சி நீர்வாழ் உயிரிழன முறைமை, நீர்வாழ் உயிரின வளர்ப்புக்கு பயோபிளாக் குளங்கள் உருவாக்குதல், செயற்கைமுறை மீன் குஞ்சு பொரிப்பகங்கள், நீர்வாழ் உயிரின வளர்ப்புக்குப் புதிய குளங்கள் உருவாக்குதல், அலங்கார மீன் வளர்ப்புப் பிரிவுகள், நீர்நிலைகள் / ஈரமான பகுதிகளில் கூண்டுகள் நிறுவுதல், ஐஸ் தயாரிப்பு நிலையங்கள், குளிர்பதனம் செய்த வாகனங்கள், ஐஸ் பெட்டிகளுடன் கூடிய மோட்டார் சைக்கிள், ஐஸ் பெட்டியுடன் கூடிய மூன்று சக்கர வாகனங்கள், ஐஸ் பெட்டியுடன் கூடிய சைக்கிள், மீன்களுக்கான தீவன பயிர்கள், விரிவாக்கம் மற்றும் ஆதரவு சேவைகள், தரமான குஞ்சுகள் கிடைக்கும் வங்கி உருவாக்குதல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு ரூ.107 கோடி ஒதுக்கியுள்ளது.
மீன்வளத் துறையில் மற்ற தொடக்க நிகழ்ச்சிகள்
சிதமர்ஹியில் மீன்குஞ்சு வங்கி உருவாக்குதல் மற்றும் கிஷன்காஞ்சில் நீர்வாழ் உயிரின நோய் கண்டறிதல் ஆய்வகம் ஆகியவற்றையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் மத்ஸ்ய சம்பட திட்டத்தின் கீழ் இதற்கு நிதி உதவி அளிக்கப் பட்டுள்ளது. மீன் உற்பத்தியாளர்களுக்கு உரிய நேரத்தில், குறைந்த செலவில், தரமான மீன்குஞ்சுகள் கிடைக்கச் செய்து, நோய் கண்டறிதல் பிரச்சினை, நீர்வளம் மற்றும் மண் பரிசோதனை வசதிகளில் உதவிகள் அளிப்பதன் மூலம் மீன் உற்பத்தி பெருக உதவி செய்வதாக இது இருக்கும்.
மாதேபுராவில் மீன் தீவன மில் ஒன்றை அவர் தொடங்கி வைக்கிறார். நீலப் புரட்சித் திட்டத்தின் கீழ் பாட்னாவில் `மீன் விற்பனை வாகனங்கள்' வசதியையும் அவர் தொடங்கி வைக்கிறார். இரு வாகனங்களில் முதலில் தொடங்கப் படுகின்றன. அப்போது பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.
பிகாரில் புசாவில் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மத்திய வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் விரிவான மீன் உற்பத்தி தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். மீன்குஞ்சுகள் உற்பத்தி தொழில்நுட்ப வசதிகளை அளிக்கும் இந்த மையம், நோய் அறிகுறிகள் பற்றிய பரிந்துரைகள் குறித்து ஆய்வு செய்யும். இதன் மூலம் மீன் உற்பத்தி பெருகும். மீனவர்களின் திறன் அதிகரிக்கும்.
இ-கோபாலா ஆப்
இ-கோபாலா என்பது விரிவான கலப்பின உற்பத்தி சந்தைப்படுத்தலுக்கு உதவுவதாகவும், விவசாயிகளின் நேரடி பயன்பாட்டுக்கான முனையமாகவும் இருக்கும். இப்போது விந்து, சினைக்கரு போன்ற இனப்பெருக்கம் சார்ந்த ஊனீர்களை நோயற்றதாக வாங்க மற்றும் விற்க டிஜிட்டல் வசதி எதுவும் இல்லை; தரமான இனச்சேர்க்கை சேவைகள் அளிப்பது (செயற்கைக் கருத்தரித்தல், கால்நடை முதலுதவி, தடுப்பூசி, சிகிச்சை போன்றவை) கால்நடை சத்துணவு குறித்து விவசாயிகளுக்கு வழிகாட்டுதல், பொருத்தமான ஆயுர்வேதா மருந்து/ இனக்குழு கால்நடை மருந்துகள் பயன்படுத்துதல் ஆகிய வசதிகள் இதன் மூலம் கிடைக்கும். தடுப்பு மருந்து தர வேண்டிய காலம், கருத்தரிப்பை கண்டறிதல், குட்டிகள் வளர்ப்பு போன்றவை குறித்து தகவல்கள் அனுப்பவும், அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அந்தப் பகுதியில் அமல் செய்யப்படும் திட்டங்கள் பற்றிய தகவல்களைத் தெரிவிக்கவும் இப்போது எந்த நடைமுறையும் அமலில் இல்லை. இந்த எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண்பதாக இ-கோபாலா ஆப் இருக்கும்.
கால்நடை பராமரிப்புத் துறையில் தொடங்கப்படும் பிற திட்டங்கள்
அதிநவீன வசதிகளுடன் கூடிய விந்து உற்பத்தி நிலையத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார். பிகார் மாநிலம் புர்ணியாவில் ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் இது உருவாக்கப் பட்டுள்ளது. மாநில அரசு அளித்த 75 ஏக்கர் நிலத்தில் ரூ.84.27 கோடி செலவில் இது அமைந்துள்ளது. அரசுத் துறையில் மிகப் பெரிய விந்து உற்பத்தி நிலையமாக இது இருக்கும். ஆண்டுக்கு 50 லட்சம் விந்து தொகுப்புகள் இங்கு உருவாக்கப்படும். பிகாரில் உள்ள உள்நாட்டு மீன்வளங்களைப் பாதுகாப்பதில் இது புதிய வடிவத்தை அளிக்கும். கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள விந்து தேவைகளை இது பூர்த்தி செய்யும்.
ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஐ.வி.எப். ஆய்வகத்தை பாட்னாவில் கால்நடை பராமரிப்புப் பல்கலைக்கழகத்தில் பிரதமர் தொடங்கி வைக்கிறார். 100 சதவீத மானிய உதவியுடன் நாடு முழுக்க மொத்தம் 30 இ.டி.டி மற்றும் ஐ.வி.எப். ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன. உள்நாட்டு இனங்களின் மேன்மையான இனங்களை ஊக்குவிக்கவும், பால் உற்பத்தியைப் பெருக்கி, உற்பத்தியை பல மடங்கு அதிகரிக்கச் செய்வதாகவும் இது இருக்கும்.
ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் பிகாரில் பெருசராய் மாவட்டத்தில் பரோனி பால் ஒன்றியத்தில் செயற்கைக் கருவூட்டலுக்கு பாலினம் தேர்வு செய்த விந்தணு மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். செயற்கைப் புலனறிதல் மூலமாக, பாலினம் தேர்வு செய்யப்பட்ட விந்தணு பயன்படுத்துவதால் பெண் இனங்கள் மட்டுமே உருவாகும் (90 சதவீதம் வரையில் துல்லியத்தன்மை இருக்கும்) இதனால் நாட்டில் பால் உற்பத்தி இரட்டிப்பாகும். விவசாயிகளின் இடத்திலேயே ஐ.வி.எப். தொழில்நுட்பத்தின் செய்முறையைக் காட்டக் கூடிய திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். உயர் பலன் தரக் கூடிய பிராணிகளை வேகமாக உருவாக்கும் வகையில் இந்தத் தொழில்நுட்பம் பரவலாக்கப்படும்.