

புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் 2022 செப்டம்பர் 17 அன்று பிற்பகல் 5.30 மணிக்கு தேசிய சரக்கு போக்குவரத்து கொள்கையை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிடுவார்.
வளர்ச்சியடைந்த மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் சரக்கு போக்குவரத்துக்கான செலவு அதிகமாக இருப்பதை உணர்ந்ததால் தேசிய சரக்கு போக்குவரத்துக் கொள்கை தேவைப்பட்டது. இந்திய சரக்குகள் உள்ளூர் நிலையிலும், ஏற்றுமதி சந்தைகளிலும், போட்டியிடுவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்த சரக்கு போக்குவரத்துக்கான செலவை இந்தியாவில் குறைப்பது அவசியமாக உள்ளது. இந்த செலவுக் குறைப்பு நாட்டின் பல்வேறு துறைகளில் திறனை மேம்படுத்தும். மேலும், மதிப்புகூடுதலை ஊக்குவிக்கும்.
வணிகம் செய்வதை எளிதாக்குதல், வாழ்க்கையை எளிதாக்குதல் என்ற இரண்டுக்கும் 2014 முதல் அரசு குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தை அளித்து வருகிறது.
பலதுறைகளை மற்றும் பல எல்லை வரம்புகளை இணைக்கும் கட்டமைப்புடன் இருப்பதால், தேசிய சரக்கு போக்குவரத்துக் கொள்கை அதிகப்பட்ச செலவு மற்றும் திறன் இன்மை பிரச்சனைக்கு தீர்வாக இருக்கும். ஒட்டுமொத்த சரக்கு போக்குவரத்தின் வளர்ச்சிக்கு இது மேலும் ஒரு நடவடிக்கையாக உள்ளது. இந்திய சரக்குகளின் போட்டித் தன்மையை மேம்படுத்துவதற்கான முயற்சி என்பதோடு பொருளாதார வளர்ச்சியை விரிவுப்படுத்துவதற்கும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்குமான முயற்சியாக இந்தக் கொள்கை உள்ளது.
முழுமையான திட்டமிடல் மற்றும் அமலாக்கத்திற்கு சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒருங்கிணைப்பதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த நவீன அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்குதல் என்பது பிரதமரின் கண்ணோட்டமாகும். இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் போது திறனையும் ஒத்திசைவையும் ஏற்படுத்த முடியும். பலவகையான போக்குவரத்து தொடர்புக்கு சென்ற ஆண்டு பிரதமரால் தொடங்கப்பட்ட பிரதமரின் விரைவுசக்தி இந்த திசையில் ஒரு முன்னோட்டமாக இருந்தது. தேசிய சரக்கு போக்குவரத்துக் கொள்கை, பிரதமரின் விரைவுசக்திக்கு உதவுவதாகவும் மேலும் ஊக்கம் அளிப்பதாகவும் இருக்கும்.