கொவிட் முன்களப் பணியாளர்களுக்கு ‘திருத்தியமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சியை’ 2021 ஜூன் 18ம் தேதி அன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.
26 மாநிலங்களில் உள்ள 111 பயிற்சி மையங்களில் இந்நிகழ்ச்சி தொடங்கும். இந்நிகழ்ச்சி தொடக்கத்துக்குப்பின், பிரதமர் உரையாற்றுவார். இந்நிகழ்ச்சியில் மத்திய திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை அமைச்சரும் கலந்துக் கொள்கிறார்.
நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட கொவிட் முன்களப் பணியாளர்களின் திறன்களை மேம்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். வீட்டு கவனிப்பு உதவி , அடிப்படை கவனிப்பு உதவி, மேம்பட்ட சிகிச்சை உதவி, அவசர சிகிச்சை உதவி, மாதிரி சேகரிப்பு மற்றும் மருத்துவ சாதன உதவி ஆகியவற்றில் திருத்தியமைக்கப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் இந்த பயிற்சி வழங்கப்படும்.
இந்த திட்டம், பிரதமரின் கவுசல் விகாஸ் திட்டம் 3.0-ன் கீழ் ரூ.276 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் சிறப்பு திட்டம் ஆகும். இந்த பயிற்சி, சுகாதாரத்துறையில் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைக்கு ஏற்ப, மருத்துவம் அல்லாத சுகாதார பணியாளர்களை திறன் வாய்ந்தவர்களாக உருவாக்கும்.