டாய்கேத்தான்-2021 போட்டியில் பங்கேற்பவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூன் 24ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் கலந்துரையாடுகிறார்.
பொம்மைகள் மற்றும் விளையாட்டுகளில் புத்தாக்க கருத்துக்களை உருவாக்குவதற்காக டாய்கேத்தான் 2021 என்ற போட்டியை, மத்திய கல்வி அமைச்சகம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை அமைச்சகம், தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை அமைச்சகம், ஜவுளித்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவை இணைந்து 2021 ஜனவரி 5ம் தேதி தொடங்கியது. இதில் நாடு முழுவதும் இருந்து சுமார் 1.2 லட்சம் பேர் பதிவு செய்து, டாய்கேத்தான் 2021 போட்டிக்கு 17,000 கருத்துக்களை தாக்கல் செய்தனர். இவற்றில் 1,567 கருத்துக்கள், ஜூன் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை நடைபெறும் பிரம்மாண்ட இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த இறுதி போட்டியில் டிஜிட்டல் பொம்மை கருத்துக்கள் மட்டுமே இடம் பெறுகின்றன. டிஜிட்டல் அல்லாத பொம்மை கருத்துக்களுக்கு நேரடியாக பங்கேற்கும் இறுதிப் போட்டி தனியாக நடத்தப்படும்.
இந்தியாவின் உள்நாட்டு சந்தை மற்றும் உலகளவிலான பொம்மை சந்தை ஆகியவை, நமது உற்பத்தி துறைக்கு மிகப் பெரிய வாய்பை வழங்குகின்றன. இந்தியாவில் பொம்மை துறையை ஊக்குவித்து, பொம்பை சந்தையில் மிகப் பெரிய இடத்தை பிடிப்பதை டாய்கேத்தான்-2021 நோக்கமாக கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சரும் பங்கேற்கவுள்ளார்.