காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்- 2022-க்கு செல்லவிருக்கும் இந்திய அணியினருடன் ஜூலை 20 அன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடவிருக்கிறார். இந்த கலந்துரையாடலில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளோடு அவர்களின் பயிற்சியாளர்களும் பங்கேற்பார்கள்.
முக்கியமான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு ஆளுமைகளை ஊக்கப்படுத்தும் தமது தொடர் முயற்சியின் ஒரு பகுதியாக பிரதமர் கலந்துரையாடவுள்ளார். கடந்த ஆண்டு டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்லவிருந்த இந்திய விளையாட்டு அணியினருடனும், டோக்கியோ 2022, பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகளுக்கு செல்லவிருந்த இந்திய பாரா விளையாட்டு அணியினருடனும், பிரதமர் கலந்துரையாடினார்.
விளையாட்டு போட்டிகளின் போது கூட, விளையாட்டு ஆளுமைகளின் முன்னேற்றத்தில் பிரதமர் தீவிர ஆர்வம் காட்டுகிறார். பல சந்தர்ப்பங்களில் அவர் விளையாட்டு வீரர்களின் வெற்றி குறித்தும், கடுமையான முயற்சி குறித்தும் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அழைத்து பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பாக செயல்படுமாறு அவர்களை ஊக்கப்படுத்தியும் இருக்கிறார். மேலும் அவர்கள் நாட்டுக்கு திரும்பி வந்த பிறகும் அணியினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022 பர்மிங்காமில் 2022 ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ளன. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் மொத்தம் 19 பிரிவுகளில் 141 போட்டிகளில் 215 விளையாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்வார்கள்.