சர்வதேச கச்சா எண்ணெய் & எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி 26 அக்டோபர் 2020-ல் கலந்துரையாடுகிறார். நிதி ஆயோக் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏற்பாடு செய்திருக்கும் வருடாந்திர நிகழ்ச்சி அன்றைய தினம் இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு நடைபெறும் போது, பிரதமரின் கலந்தாடல் நடைபெறவுள்ளது.
கச்சா எண்ணெய் பயன்படுத்தும் 3வது பெரிய நாடாகவும், எல்.என்.ஜி. இறக்குமதி செய்யும் 4வது பெரிய நாடாகவும் இந்தியா இருப்பதால், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. சாதாரண நுகர்வோர் என்ற நிலையில் இருந்து, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு மதிப்புச் சங்கிலியில் இந்தியா தீவிர பங்கெடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருப்பதைக் கருத்தில் கொண்டு உலக அளவிலான கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுடன் மாண்புமிகு பிரதமர் கலந்தாடல் செய்யும் முதலாவது நிகழ்ச்சிக்கு 2016-ல் நிதி ஆயோக் அமைப்பு ஏற்பாடு செய்தது.
இத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்து மாண்புமிகு பிரதமருடன் கலந்தாடல் செய்வதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில், இத் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள், முக்கிய பங்காளர்கள் 45- 50 பேர் பங்கேற்கிறார்கள். இந்த வகையில் இதன் வளர்ச்சியை அறிந்து கொள்ள முடிகிறது. கலந்தாடல்களில் இடம் பெறும் விஷயங்களின் முக்கியத்துவம், தரப்படும் ஆலோசனைகளின் பயனுள்ள தன்மை, இந்த செயல்பாடுகளில் ஆர்வம் காட்டும் தன்மை ஆகியவற்றின் மூலம், தலைமைச் செயல் அதிகாரிகளின் கூட்டம் எந்த அளவுக்குப் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை அறியலாம்.
நிதி ஆயோக் மற்றும் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில் இப்போது 5வது நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. முக்கிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களைச் சேர்ந்த சுமார் 45 தலைமை செயல் அதிகாரிகள் இதில் பங்கேற்கிறார்கள்.
சிறந்த நடைமுறைகளைப் புரிந்து கொள்வதற்கு, சீர்திருத்தங்கள் பற்றி கலந்தாடல் செய்வதற்கு, இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு மதிப்புச் சங்கிலி அமைப்பில் முதலீடுகளை விரைவுபடுத்துவதற்கான உத்திகளை தெரிவிப்பது ஆகியற்றுக்கு உலக அளவிலான ஒரு தளமாக இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. அறிவார்ந்தவர்களின் கலந்தாடலாக மட்டும் இல்லாமல், அமல்படுத்தக் கூடிய யோசனைகளை பெறுவதற்கான மிக முக்கியமான கூட்டமாக இந்த நிகழ்ச்சி மாறி வருகிறது. உலக அளவில் எரிசக்தி பயன்பாட்டில் 3வது பெரிய நாடாக இருக்கும் இந்தியாவின் எழுச்சி அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கூட்டத்தின் முக்கியத்துவமும் அதிகரித்து வருகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் அதிகரித்து வரும் தேவைகளை சமாளிக்க 2030 வாக்கில் 300 பில்லியன் டாலருக்கும் மேல் முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.
பெட்ரோலியம் மற்றும் எரிவாயு, ஸ்டீல் துறைகளின் அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் துவக்க உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை செயல்பாடுகள் குறித்து விரிவான விளக்கம் அளிக்கப்படும். இந்தியாவில் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையின் லட்சியம் மற்றும் அதில் உள்ள வாய்ப்புகள் பற்றி அதில் விவரிக்கப்படும்.
அதன் பிறகு உலக அளவிலான தலைமை செயல் அதிகாரிகளுடன் கலந்தாடல் அமர்வுகள் நடைபெறும். அபுதாபி தேசிய ஆயில் கம்பெனியின் சிஇஓ மற்றும் ஐக்கிய அமீரக தொழில் மற்றும் நவீன தொழில்நுட்பத் துறை அமைச்சர் மேதகு டாக்டர் சுல்தான் அஹமது அல் ஜேபர், கத்தார் எரிசக்தி விவகாரங்கள் துறை இணை அமைச்சர், கத்தார் பெட்ரோலியம் துணை சேர்மன், தலைவர் & சிஇஓ மேதகு சாட் ஷெரிடா அல்-காபி, ஆஸ்ட்ரியா OPEC பொதுச் செயலாளர் மேதகு முகமது சானுசி பர்கின்டோ ஆகியோர் எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறை குறித்த தகவல்களுடன் அமர்வுகளுக்குத் தலைமை ஏற்கிறார்கள்.
டாக்டர் இகோர் செச்சின், சேர்மன் & சி.இ.ஓ., ரோஸ்நெப்ட், ரஷியா; திரு. பெர்னார்டு லூனே, சி.இ.ஓ., பி.பி. லிமிடெட்; திரு பாட்ரிக் பௌயன்னே, சேர்மன் & சி.இ.இ., டோட்டல் எஸ்.ஏ., பிரான்ஸ்; திரு. அனில் அகர்வால், வேதாந்தா ரிசோர்சஸ் லிமிடெட் சேர்மன்; திரு. முகேஷ் அம்பானி, சேர்மன் & நிர்வாக இயக்குநர், ஆர்.ஐ.எல்; டாக்டர் பட்டிஹ் பிரோல், செயல் இயக்குநர், சர்வதேச எரிசக்தி ஏஜென்சி, பிரான்ஸ்; திரு. ஜோஷப் மெக் மோனிக்லே, பொதுச் செயலாளர், சர்வதேச எரிசக்தி சம்மேளனம், சௌதி அரேபியா; யுரி சென்டியுரின், பொதுச் செயலாளர், ஜி.ஈ.சி.எப். ஆகியோரும் பிரதமருடன் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். லியோன்டெல் பசெல், டெல்லூரியன், ஸ்லம்பெர்கர், பேக்கர் ஹியூக்ஸ், ஜெரா, எமர்சன் மற்றும் எக்ஸ்-கோல், இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளும் நிபுணர்களும் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவுள்ளனர்.
இதற்கு முன்னதாக சி.இ.ஆர்.ஏ. வீக் சார்பில் நான்காவது ஆண்டாக நடத்தப்படும் இந்தியா எரிசக்தி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்கிறார். உலக அளவில் முக்கியத்துவமான தகவல் அளிப்பு, பகுப்பாய்வு மற்றும் தீர்வு அளிக்கும் எச்.ஐ.எஸ். மார்க்கிட் நிறுவனம் இதை நடத்துகிறது. இந்தியா மற்றும் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வதேச நிபுணர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். பிராந்திய எரிசக்தி நிறுவனங்கள், எரிசக்தி தொடர்பான தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மற்றும் அரசுகளின் சார்பில் அவர்கள் பங்கேற்கிறார்கள்.
பின்வருபவர்கள் உள்ளிட்டோர் தொடக்க உரையாற்றுகின்றனர்:
- எச்.ஆர்.எச். அப்துல்அஜீஸ் பின் சல்மான் அல் சாட் – எரிசக்தித் துறை அமைச்சர், சௌதி அரேபியா
- டான் பிரௌயில்லெட்டே – எரிசக்தித் துறை செயலர், அமெரிக்கா
- டாக்டர் டேனியல் யெர்ஜின் – துணைத் தலைவர், எச்.ஐ.எஸ். மார்க்கிட், சேர்மன், சி.ஈ.ஆர்.ஏ. வீக்
இந்தியா எரிசக்தி மாநாட்டில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் தலைப்புகளில் அடங்கியுள்ளவை: இந்தியாவின் எதிர்கால எரிசக்தித் தேவையில் பெருநோய்த் தொற்றின் தாக்கம்; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான சப்ளையை உறுதிப்படுத்துவது; இந்தியாவைப் பொருத்த வரையில் எரிசக்தி சூழலின் நிலை மாற்றம் மற்றும் பருவநிலை மாற்றம் எப்படி இருக்கும்; இந்தியாவின் எரிசக்தி பயன்பாட்டு வகையில் இயற்கை எரிவாயுவின் பங்கு: என்ன வழி உள்ளது; சுத்திகரிப்பு & பெட்ரோ கெமிக்கல்ஸ்: உபரி நிலையிலான உத்திகள்; புதுமை சிந்தனையாக்கத்தின் வேகம்: உயிரி எரிபொருள், ஹைட்ரஜன், சி.சி.எஸ்., மின்சார வாகனங்கள், டிஜிட்டல் நிலைமாற்றம்; மற்றும் மார்க்கெட் மற்றும் ஒழுங்காற்று சீரமைப்பு: என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட தலைப்புகள் இடம் பெறும்.