உத்தரபிரதேசத்தில் உள்ள ஸ்வாநிதி திட்டத்தின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி, வரும் 27ஆம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக உரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியில் உத்தரபிரதேச மாநில முதலமைச்சரும் கலந்து கொள்ளவிருக்கிறார்.
கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்ட நடைபாதை வியாபாரிகள் தங்கள் வாழ்வாதார நடவடிக்கைகளை மீண்டும் துவங்குவதற்கு ஏதுவாக, பிரதமரின் நடைபாதை வியாபாரிகள் தற்சார்பு நிதி ( பிரதமரின் ஸ்வாநிதி) திட்டம், கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவற்றில் 12 லட்சத்திற்கும் கூடுதலான விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, 5.35 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேச மாநிலத்தில் இதுவரை பெறப்பட்டுள்ள 6 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களில், 3.27 லட்சம் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 1.87 லட்சம் கடன்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.
பிரதமருடனான இந்தக் கலந்துரையாடலை, உத்திரபிரதேச மாநிலமெங்கும் உள்ள ஸ்வாநிதி திட்ட பயனாளிகள் காண்பார்கள். இந்த நிகழ்ச்சி, டிடி செய்திகள் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும்.