2020 மார்ச் 7ஆம் தேதி அன்று மக்கள் மருந்தக தின கொண்டாட்டங்களில் பிரதமர் திரு. நரேந்திர மோடி புதுதில்லியிலிருந்து காணொளி மூலம் பங்கேற்கிறார். அப்போது பிரதமரின் பாரத மக்கள் மருந்தக திட்ட மையங்கள் ஏழுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். இந்தத் திட்டத்திற்கு உத்வேகம் அளிக்கவும், அதன் சாதனைகளை கொண்டாடவும் மார்ச் 7ஆம் தேதி மக்கள் மருந்தக திட்ட தினமாக நாடெங்கும் கொண்டாடப்படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மருந்தக உரிமையாளர்கள் மற்றும் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடுகிறார். இது தொடர்பாக பிரதமர் தூர்தர்ஷன் மூலம் வெளியிடும் செய்தியினை, அனைத்து மக்கள் மருந்தகங்களிலும் ஒளிபரப்பு செய்யப் பார்க்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் மருந்தகங்களில் இந்தத் திட்டம் குறித்து மருத்துவர்கள், ஊடகத்தினர், மருந்தாளுனர்கள், பயனாளிகள் குழுவினரின் விவாத நிகழ்ச்சியும் நடைபெறும்.
உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள பிரதமர் பாரத மருந்தக திட்ட மையத்தில் மத்திய ரசாயனப்பொருட்கள், உரங்கள் துறை அமைச்சர் திரு D V சிவானந்த கவுடா பங்கேற்கிறார். ஜம்மு-காஷ்மீரில் புல்வாமா என்ற இடத்தில் உள்ள பிரதமர் பாரத மருந்தக திட்ட மையத்தில், கப்பல் போக்குவரத்து மற்றும் ரசாயனப்பொருட்கள், உரங்கள் துறை இணையமைச்சர் திரு. மன்சுக் லஷ்மண்பாய் மண்டாவியா பங்கேற்கிறார்.
நாட்டின் 700 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 6,800 கடை மக்கள் மருந்தக மையங்கள் உலகின் மிகப்பெரிய சில்லரை மருந்து விற்பனை கட்டமைப்பாக விளங்குகின்றன. 2019-20 நிதியாண்டில் இவற்றின் விற்பனை ரூ.390 கோடியை மிஞ்சியது. இவற்றின் செயல்பாடுகளால் சாமானிய மக்களுக்கு மொத்தம் சுமார் ரூ.2200 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் சிறந்த, நிலையான, நல்ல வருவாய் உள்ள சுய வேலைவாய்ப்புக்கு ஆதாரமாக விளங்குகிறது.