ஐந்தாவது ஆயுர்வேத தினமான நவம்பர் 13ம் தேதி அன்று, ஜாம்நகரில் ஆயுர்வேத கல்வி, ஆராய்ச்சி மையத்தையும் (ஐடிஆர்ஏ), ஜெய்ப்பூரில் தேசிய ஆயுர்வேத மையத்தையும்(என்ஐஏ) பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த மையங்கள், 21ம் நூற்றாண்டில், ஆயுர்வேத வளர்ச்சியிலும், முன்னேற்றத்திலும் உலகளவில் முன்னணி பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பின்னணி:
ஆயுர்வேத தினம் கடந்த 2016ம் ஆண்டிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் தன்வந்திரி பிறந்த தினத்தில் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தாண்டு நவம்பர் 13ம் தேதி, ஆயுர்வேத தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆயுர்வேத தினம் என்பது கொண்டாட்டத்தை விட, தொழிலுக்கும், சமுதாயத்திற்கும் மீண்டும் அர்ப்பணிக்கும் ஒரு நிகழ்வு. கொவிட்-19 தொற்று மேலாண்மையில் ஆயுர்வேதத்தின் பங்கு, இந்தாண்டு ஆயுர்வேத தினத்தின் முக்கிய அம்சமாக இருக்கும்.
நாட்டின் பொது சுகாதார சவால்களுக்கு, திறன்மிக்கதாகவும், குறைந்த செலவிலும் தீர்வளிக்க ஆயுஷ் முறைகளின் ஆற்றலை பயன்படுத்துவதுதான் அரசின் முன்னுரிமை. மேலும், ஆயுஷ் கல்வியை நவீனப்படுத்துவதற்கும் அரசு முன்னுரிமை அளிக்கிறது. இதற்காக கடந்த 3-4 ஆண்டுகளாக பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. ஜாம்நகர் ஐடிஆர்ஏ–வை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மையமாகவும், ஜெய்ப்பூர் என்ஐஏ மையத்தை நிகர்நிலை பல்கலைக்கழகமாகவும் நாட்டுக்கு அர்பணிப்பது, ஆயுர்வேதக் கல்வியை நவீனப்படுத்துவதற்கு மட்டும் அல்ல, பாரம்பரிய மருத்துவத்தின் பரிணாமத்துக்கும் வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை. இது ஆயுர்வேதக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும், தேசிய மற்றும் சர்வதேச தேவைக்கேற்ப பல்வேறு படிப்புகளை உருவாக்குவதற்கும், மேலும் சான்றுகளை உருவாக்கும் வகையில் நவீன ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதற்கும் சுயாட்சியை வழங்கும்.