சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் 2-வது வளாகத்தை கொல்கத்தாவில் 7, ஜனவரி 2022 அன்று பிற்பகல் 1 மணியளவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி வாயிலாக தொடங்கி வைக்க உள்ளார்.
நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும், சுகாதார வசதிகளை விரிவுபடுத்தி, மேம்படுத்துவதென்ற பிரதமரின் தொலைநோக்குப் பார்வையின்படி சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின்
2-வது வளாகம் அமைக்கப்பட உள்ளது.
சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தில் சிகிச்சைக்கு வரும் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வந்ததால், இதனை விரிவுபடுத்த வேண்டிய தேவை உள்ளதென சில காலமாக உணரப்பட்டு வந்தது. இரண்டாவது வளாகம் அமைக்கப்படுவதன் மூலம் இந்த தேவை பூர்த்தி செய்யப்படும்.
சித்தரஞ்சன் தேசிய புற்றுநோய் நிறுவனத்தின் இரண்டாவது வளாகம் ரூ.530 கோடி செலவில் கட்டப்பட உள்ளது, இதில் 75:25 என்ற விகிதத்தின் அடிப்படையில், ரூ.400 கோடி மத்திய அரசால் வழங்கப்படும். எஞ்சிய தொகையை மேற்குவங்க மாநில அரசு வழங்கும். புற்றுநோயை கண்டறிதல், எந்த நிலையில் உள்ளது என்பதை அறிதல், சிகிச்சை அளித்தல், தொடர் சிகிச்சை போன்றவற்றுக்கான அதிநவீன வசதிகளைக் கொண்ட 460 படுக்கை வசதியுடைய விரிவான புற்றுநோய் சிகிச்சை மையமாக இந்த வளாகம் திகழும். இந்த வளாகத்தில், அணு மருத்துவம் (PET), 3.0 டெஸ்லா எம்ஆர்ஐ, 128 ஸ்லைஸ் சிடி ஸ்கேனர், ரேடியோநியூக்லைடு சிகிச்சைப் பிரிவு, என்டோஸ்கோபி அறை, நவீன பிராக்கிதெரபி பிரிவு உள்ளிட்ட அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படும். இந்த வளாகம் அதிநவீன புற்றுநோய் ஆராய்ச்சி மையமாகவும் திகழ்வதுடன், நாட்டின் கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த புற்றுநோயாளிகளுக்கு விரிவான சிகிச்சை அளிப்பதாகவும் அமையும்.