சோம்நாத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சுற்றுலா மாளிகையை பிரதமர் திரு.நரேந்திர மோடி 21 ஜனவரி 2022 அன்று காலை 11 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவை தொடர்ந்து பிரதமரின் உரை இடம் பெறும்.
சோம்நாத் கோயிலுக்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இங்கு தற்போதுள்ள சுற்றுலா மாளிகை, கோயிலிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் புதிய மாளிகை கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதையடுத்து சோம்நாத் கோயிலுக்கு அருகிலேயே ரூ.30 கோடிக்கும் மேற்பட்ட செலவில் புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டுள்ளது. சொகுசு அறைகள், முக்கியப் பிரமுகர்களுக்கான அறைகள், டீலக்ஸ் அறைகள், மாநாட்டு கூடம், கலையரங்கம் உள்ளிட்ட உயர்தர வசதிகளுடன் இந்த புதிய மாளிகை கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய மாளிகையின் எந்த அறையிலிருந்து பார்த்தாலும் கடற்கரை தெரியும் வகையில் இந்த மாளிகையின் நிலப்பரப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது