புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் 2024 ஆகஸ்ட் 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட நீதித்துறையின் தேசிய மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில், உச்சநீதிமன்றம் நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் வெளியிடப்படும் தபால் தலை மற்றும் நாணயத்தை பிரதமர் வெளியிடுவார்.
இந்திய உச்ச நீதிமன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு நாள் மாநாட்டில், உள்கட்டமைப்பு மற்றும் மனித வளங்கள், அனைவரையும் உள்ளடக்கிய நீதிமன்ற அறைகள், நீதித்துறை பாதுகாப்பு மற்றும் நீதித்துறை நல்வாழ்வு, வழக்கு மேலாண்மை மற்றும் நீதித்துறை பயிற்சி போன்ற மாவட்ட நீதித்துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் ஐந்து பணி அமர்வுகளை நடத்தும்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சட்டம் மற்றும் நீதித்துறைக்கான மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), இந்திய அட்டர்னி ஜெனரல், உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தலைவர், இந்திய பார் கவுன்சில் தலைவர் ஆகியோரும் தொடக்க விழாவில் பங்கேற்கின்றனர்..