காமன்வெல்த் சட்டக் கல்விச் சங்கத்தின் காமன்வெல்த் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மாநாடு 2024-ஐ 2024 பிப்ரவரி 3 ஆம் தேதி காலை 10 மணியளவில் விஞ்ஞான் பவனில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
"நீதி வழங்கலில் எல்லை தாண்டிய சவால்கள்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெறும் இந்த மாநாடு, நீதித்துறை மாற்றம் போன்ற சட்டம் மற்றும் நீதி தொடர்பான முக்கியமான பிரச்சினைகள் மற்றும் சட்ட நடைமுறையின் நெறிமுறை பரிமாணங்கள், நிர்வாகப் பொறுப்பு, மற்றும் நவீன கால சட்டக் கல்வியை மறுபரிசீலனை செய்தல் ஆகியவை குறித்து விவாதிக்கும்.
இந்த மாநாட்டில் ஆசிய-பசிஃபிக், ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த் நாடுகளின் தலைமை வழக்கறிஞர்கள் மற்றும் தலைமை சட்ட ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு சர்வதேசப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். சட்டக் கல்வி மற்றும் நாடுகடந்த நீதி வழங்கலில் உள்ள சவால்களை எதிர்கொள்ள ஒரு விரிவான திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு பிரத்யேக வட்ட மேசை மாநாடும் இதில் அடங்கும்.