தில்லியில் உள்ள ரோகினியில் அதிநவீன மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான அடிக்கல்லை நாட்டுகிறார் பிரதமர்
12,200 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி ஜனவரி 5 ஆம் தேதி மதியம் சுமார் 12:15 மணிக்கு தில்லியில் தொடக்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார். சாஹிபாபாத் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திலிருந்து புதிய அசோக் நகர் ஆர்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு காலை 11 மணிக்கு நமோ பாரத் ரயிலில் பிரதமர் பயணம் மேற்கொள்வார்.
பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சாஹிபாபாத் மற்றும் நியூ அசோக் நகர் இடையே சுமார் 4,600 கோடி ரூபாய் மதிப்பிலான தில்லி-காசியாபாத்-மீரட் நமோ பாரத் வழித்தடத்தின் 13 கிமீ தூரத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த திறப்பு விழாவின் மூலம் தில்லி தனது முதல் நமோ பாரத் இணைப்பைப் பெறும். இது தில்லி மற்றும் மீரட் இடையேயான பயணத்தை கணிசமாக எளிதாக்கும். மேலும் ஒப்பிடமுடியாத பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையுடன் அதிவேக மற்றும் வசதியான பயணத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு பயனளிக்கும்.
1,200 கோடி மதிப்பிலான தில்லி மெட்ரோ 4ஆம் கட்டத்தின் ஜனக்புரி மற்றும் கிருஷ்ணா பார்க் இடையேயான 2.8 கிமீ தூரத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். தில்லி மெட்ரோ கட்டம் - IV இன் முதல் பகுதி இதுவாகும். மேற்கு தில்லியின் கிருஷ்ணா பார்க், விகாஸ்புரியின் சில பகுதிகள், ஜனக்புரி உள்ளிட்ட பகுதிகள் பயனடையும்.
சுமார் ரூ.6,230 கோடி மதிப்பிலான தில்லி மெட்ரோ 4-ஆம் கட்டத்தின் 26.5 கிமீ ரிதாலா - குண்ட்லி பகுதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த வழித்தடம் தில்லியில் உள்ள ரிதாலாவை ஹரியானாவில் உள்ள நாதுபூருடன் (குண்ட்லி) இணைக்கும், இது தில்லி மற்றும் ஹரியானாவின் வடமேற்கு பகுதிகளில் இணைப்பை கணிசமாக மேம்படுத்தும். ரோகினி, பவானா, நரேலா, குண்ட்லி ஆகியவை பயன்பெறும். முக்கிய பகுதிகள், குடியிருப்பு, வணிக மற்றும் தொழில்துறை மண்டலங்களுக்கான அணுகலை மேம்படுத்தும். செயல்பாட்டிற்கு வந்ததும், நீட்டிக்கப்பட்ட ரெட் லைன் வழியாக தில்லி, ஹரியானா மற்றும் உத்தரபிரதேசம் முழுவதும் பயணிக்க இது உதவும்.
புதுதில்லியின் ரோகினியில் சுமார் 185 கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ள மத்திய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்திற்கான) புதிய அதிநவீன கட்டிடத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த வளாகம் அதிநவீன சுகாதார மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பை வழங்கும். புதிய கட்டிடத்தில் நிர்வாகப் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ஒரு பிரத்யேக சிகிச்சை பிரிவு ஆகியவை இருக்கும். இது நோயாளிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் தடையற்ற சுகாதார அனுபவத்தை உறுதி செய்யும்.