பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளத்தின் 3-வது அமர்வை புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை மாலை 4.30 மணியளவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த 3-வது அமர்வுக்கான கருப்பொருள், “மாறி வரும் பருவ நிலையில் உள்ளூர் விரிவாற்றலைக் கட்டமைத்தல்” என்பதாகும்.
இந்த நிகழ்ச்சியின் போது, சுபாஷ் சந்திர போஸ் பேரிடர் மேலாண்மை விருதுகளை பிரதமர் வழங்கி கவுரவிப்பார். இந்த ஆண்டுக்கான விருதுகளுக்கு ஒடிசா மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மிசோரத்தில் உள்ள லுங்லேய் தீயணைப்பு நிலையம் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. பேரிடர் அபாயக் குறைப்புத் துறையில் மேற்கொள்ளப்படும் புதுமையான நடைமுறைகள், முன்முயற்சிகள், உபகரணங்கள் ஆகியவற்றை பறைசாற்றும் கண்காட்சியையும் பிரதமர் திறந்து வைப்பார்.
பேரிடர் அபாயக் குறைப்புப் பிரிவில் உரையாடல்கள், அனுபவங்கள், எண்ணங்கள், சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ளுதல், செயல்பாட்டுடன் கூடிய ஆராய்ச்சி, வாய்ப்புகளைக் கண்டறிதல் ஆகியவற்றை செயல்படுத்த பல்வேறு துறைகள் சம்பந்தப்பட்ட பேரிடர் அபாயக் குறைப்புக்கான தேசிய தளம் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.