குடிசைப் பகுதி மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் தில்லியில் உள்ள கல்காஜியில் புதிதாக கட்டப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான 3,024 அடுக்குமாடி வீடுகளை பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை துவக்கி வைத்து, பூமிஹீன் முகாம் பயனாளிகளுக்கு வீட்டுச் சாவிகளை வழங்குகிறார். விஞ்ஞான்பவனில் நாளை மாலை 4.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அனைவருக்கும் வீட்டு வசதி என்ற பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்திற்கு ஏற்ப குடிசைப் பகுதி மறுவாழ்வு திட்டத்தை 376 ஜூக்கி சோப்ரி தொகுப்பு பகுதியில், தில்லி மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டது. அந்த பகுதியில் முறையான அடிப்படை வசதிகளுடன் கூடிய சிறப்பான ஆரோக்கியமான வாழ்க்கைச் சூழலை வழங்கக் கூடிய வீட்டுவசதித் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
கல்காஜி விரிவாக்கத் திட்டத்தின் கீழ், பூமிஹீன், நவ்ஜீவன், ஜவஹர் முகாம்களில் உள்ள மூன்று குடிசைப் பகுதிகள், கண்டறியப்பட்டு படிப்படியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டமாக பூமிஹீன் முகாமில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்காக 3,024 வீடுகள், கட்டப்பட்டுள்ளன. 2-வது கட்டத்தில் நவ்ஜீவன் முகாம், ஜவஹர் முகாம்களில் காலி செய்யப்பட்ட இடங்களில் வீடுகள் கட்டப்பட உள்ளன.
முதல் கட்டத்தில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள 3,024 வீடுகளும் குடியேற தயார் நிலையில் உள்ளன. இந்த வீடுகள் நவீன அடிப்படை வசதிகளுடன் ரூ.345 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. சமுதாயப் பூங்காக்கள், மின் உபநிலையங்கள், கழிவு சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் குழாய்கள், மின் தூக்கிகள், தூய்மையான குடிநீர் விநியோகத்திற்காக தரைமட்ட தண்ணீர் சேமிப்புத் தொட்டிகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. வீடுகள் ஒதுக்கப்பட்டு பத்திரங்கள் வழங்கப்படும் போது அது பயனாளிகளுக்கு பாதுகாப்பு உணர்வை அளிக்கும்.