25 ஆவது தேசிய இளைஞர் விழாவை பிரதமர் திரு நரேந்திர மோடி புதுச்சேரியில், 12 ஜனவரி 2022 அன்று காலை 11 மணியளவில் காணொலி வாயிலாக தொடங்கி வைக்கவுள்ளார். சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்திய இளைஞர்களின் மனதை பக்குவப்படுத்தி, தேச வளர்ச்சிக்கான ஒருங்கிணைந்த சக்தியாக மாற்றியமைக்கும் நோக்கில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இது, சமூக ஒருங்கிணைவு மற்றும் அறிவுசார் & கலாச்சார ஒருமைப்பாட்டுக்கான மாபெரும் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
இந்தியாவின் மாறுபட்ட கலாச்சாரங்களை, ‘ஒன்றுபட்ட பாரதம்-வலிமையான பாரதம்’ என்ற அம்சத்தின் கீழ், ஒருங்கிணைப்பதும் இதன் நோக்கமாகும்.
இந்த ஆண்டு, கொவிட் நிலவரத்தை கருத்தில் கொண்டு, இந்த விழா 12-13 ஜனவரி 2022-ல் காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. தொடக்க விழாவைத் தொடர்ந்து, குறிப்பிட்ட நான்கு மையக்கருத்துக்கள் பற்றி குழு விவாதம் இடம்பெறக்கூடிய தேசிய இளைஞர் மாநாடும் நடைபெறவுள்ளது.
இந்த விழா இளைஞர்கள் சார்ந்த வளர்ச்சி என்ற கருத்துடைய விவாதங்களை கொண்டதாகவும், புதிதாக உருவாகும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளிப்பது என்ற கொள்கைக்கு ஏற்ப, சுற்றுச்சூழல், பருவநிலை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு சார்ந்த வளர்ச்சி; தொழில்நுட்பம், தொழில் முனைவு மற்றும் புதிய கண்டுபிடிப்பு; உள்நாட்டு மற்றும் பண்டைக்கால ஞானம்; மற்றும் தேசிய பண்பு, தேச நிர்மாணம் மற்றும் அக வளர்ச்சி போன்ற தலைப்புகளில் விவாதங்கள் இடம் பெறவுள்ளது. புதுச்சேரி, ஆரோவில், அரிதாகி வரும் நகர அனுபவம், உள்நாட்டு விளையாட்டுகள் & நாட்டுப்புற நடனம் உள்ளிட்டவை பற்றிய பதிவு செய்யப்பட்ட வீடியோ தொகுப்புகள், இந்த விழாவில் பங்கேற்பவர்களுக்கு திரையிடப்படும். அத்துடன் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் வீரர்களுடனான திறந்தவெளி விவாதங்கள் இடம்பெறுவதுடன் அதன் தொடர்ச்சியாக மாலையில் நேரலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். காலையில் காணொலி வாயிலாக யோகா பயிற்சி அரங்கிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது, “நான் கனவு காணும் இந்தியா” மற்றும் “இந்திய சுதந்திரப் போராட்டத்தின் அறியப்படாத வீரர்கள்” பற்றிய கட்டுரைகளையும் பிரதமர் வெளியிடவுள்ளார். இந்த இரு அம்சங்கள் குறித்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனுப்பியவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள் தற்போது வெளியிடப்படவுள்ளன.
குறு-சிறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகத்தின் சார்பில், புதுச்சேரியில் ரூ.122 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப மையத்தையும் பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். மின்னணு சாதன வடிவமைப்பு & உற்பத்திப் பிரிவில் கவனம் செலுத்தும் நோக்குடன் இந்த தொழில்நுட்ப மையம் சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளை கொண்டதாக உள்ளது. இந்த மையம் இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதுடன் ஆண்டுக்கு சுமார் 6,400 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கக்கூடியதாகவும் இருக்கும்.
புதுச்சேரி அரசின் சார்பில் ரூ.23 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள திறந்தவெளி திரையரங்குடன் கூடிய கலையரங்கமான பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தையும் பிரதமர் திறந்து வைக்கவுள்ளார். இந்த மண்டபம் தொடக்கத்தில் கல்வி நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட இருப்பதுடன் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அமரக்கூடியதாக இருக்கும்.