தமிழ்நாட்டில் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளையும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் திரு நரேந்திர மோடி 2022, ஜனவரி 12 அன்று பிற்பகல் 4 மணிக்குத் தொடங்கிவைக்கவுள்ளார்.
புதிய மருத்துவக் கல்லூரிகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டு செலவில் கட்டப்பட்டுள்ளன. இதில் ரூ.2,145 கோடி மத்திய அரசாலும் எஞ்சியத் தொகை தமிழ்நாடு அரசாலும் வழங்கப்பட்டது. விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், ராமநாதபுரம், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் மருத்துவக் கல்வியைக் கட்டுப்படியானதாக அதிகரித்தல், சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் பிரதமரின் தொடர்ச்சியான முயற்சி அடிப்படையில் இந்த மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 1,450 இடங்களைக் கொண்ட புதிய மருத்துவக் கல்லூரிகள், ‘தற்போதுள்ள மாவட்ட / அவசர முதலுதவி மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கும்’ மத்திய அரசு ஆதரவிலான திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன. அரசு அல்லது தனியார் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் இந்தத் திட்டத்தின் கீழ் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படுகின்றன.
இந்தியப் பாரம்பரியம், செம்மொழிகள் ஆகியவற்றை மேம்படுத்தி பாதுகாக்கும் பிரதமரின் தொலைநோக்குத் திட்டத்தின் அடிப்படையில் சென்னையில், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முழுமையான நிதியுதவியைக் கொண்ட இப்புதிய வளாகம் ரூ.24 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதுவரை வாடகைக் கட்டடத்தில் செயல்பட்டு வந்த இந்த நிறுவனம், தற்போது மூன்று தளங்களைக் கொண்ட புதிய வளாகத்தில் செயல்படும். விசாலமான நூலகம், மின்னணு நூலகம், கருத்தரங்கக் கூடங்கள், பலவகை ஊடக அரங்கு, போன்றவற்றை புதிய வளாகம் கொண்டுள்ளது.
மத்திய கல்வித்துறையின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஆராய்ச்சி செயல்பாடுகள் மூலம், செம்மொழித் தமிழ் மேம்பாட்டிற்குப் பங்களிப்பு செய்கிறது. இதன் மூலம் தமிழ் மொழியின் தொன்மையும், தனித்துவமும் நிறுவப்படுகிறது. இதன் நூலகத்தில் 45,000-க்கும் கூடுதலாக தொன்மையான தமிழ்நூல்கள், சேகரிக்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழை மேம்படுத்தவும், அதன் மாணவர்களுக்கு உதவவும் இந்த நிறுவனம் கருத்தரங்குகள் நடத்துதல், பயிற்சித் திட்டங்கள், படிப்பு உதவித்தொகை வழங்குதல் போன்ற கல்வி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது. ‘திருக்குறளை’ பல்வேறு இந்திய மொழிகளிலும், 100 வெளிநாட்டு மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. செம்மொழித் தமிழை உலகம் முழுவதும் பரப்புவதற்கு உகந்த வகையில், பணியாற்றும் சூழலைக் கொண்டதாக இந்தப் புதிய வளாகம் இருக்கும்.