டேராடூன் - தில்லி இடையிலான வந்தே பாரத் விரைவு ரயில் சேவையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி மே 25-ம் தேதி காலை 11 மணியளவில் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார்.
இது உத்தராகண்ட் மாநிலத்தில் அறிமுகம் செய்யப்படும் முதலாவது வந்தே பாரத் ரயில் சேவையாகும். உலகத் தரத்திலான வசதிகளுடன் சிறப்பான பயண அனுபவத்தை இந்த ரயில் வழங்கும். குறிப்பாக, அம்மாநிலத்திற்கு சுற்றுலா செல்வோருக்கு இந்த ரயில் மிகவும் பயனுள்ளதாக அமையும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இந்த ரயில், கவாச் தொழில் நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், பொதுப்போக்குவரத்தில் தூய எரிசக்தி பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. அந்த வகையில் ரயில்வே, நாட்டில் உள்ள ரயில்பாதைகளை முழுமையாக மின்மயமாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், உத்தராகண்ட் மாநிலத்தில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட ரயில் வழித்தடங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இதையடுத்து அம்மாநிலத்தில் ரயில் பாதைகள் அனைத்தும் நூறு சதவீத மின்மயமாக்கப்பட்ட வழித்தடங்களாக மாறும். மின்மயமாக்கப்பட்ட ரயில் பாதைகளில் செல்லும் ரயில்கள், அதிக வேகத்துடன் செல்வதுடன், அவற்றின் இழுவைத்திறனும் அதிகரிக்கும்.