நவம்பர் 18-ம் தேதி காலை 9:30 மணிக்கு புததில்லியில் உள்ள ஹோட்டல் தாஜ் பேலஸில் நடைபெறும் 'பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கக்கூடாது' என்ற, பயங்கரவாத எதிர்ப்புக்கான நடவடிக்கைகள் தொடர்பான அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடக்க உரையாற்றுகிறார்.
நவம்பர் 18 மற்றும் 19 தேதிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரண்டு நாள் மாநாட்டில், பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள், பயங்கரவாதத்தைத் தடுப்பதற்கான நிதியுதவி மற்றும் அதிகரிக்கும் சவால்களை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும். தற்போதைய சர்வதேச செயல்திறனைப் பற்றி விவாதிக்க, பங்கேற்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு இது ஒரு தனித்துவமான தளத்தை வழங்கும். இந்த மாநாடு முந்தைய இரண்டு மாநாடுகளின் மூலம் (ஏப்ரல் 2018-ல் பாரிஸில் நடந்த மாநாடு மற்றும் நவம்பர் 2019- ல் மெல்போர்னில் நடந்த மாநாடு) பெற்ற பலன்கள் மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் நடத்தப்படும். பயங்கரவாதிகளுக்கு நிதி வழங்குவதை தடுப்பதற்கும், சம்பந்தப்பட்ட அதிகார வரம்புப் பகுதிகளை அணுகுவதற்கான உலகளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கிலான செயல்பாடுகள் குறித்தும் இதில் விவாதிக்கப்படும். அமைச்சர்கள், பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழு பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் உட்பட உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 450 பிரதிநிதிகள் இந்த இரண்டு நாள் மாநாட்டில் கலந்துகொள்வார்கள்.
இந்த மாநாட்டின் போது, 'பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத நிதியுதவிக்கான உலகளாவிய போக்குகள்', 'பயங்கரவாதத்திற்கான முறையான மற்றும் முறைசாரா நிதிகளின் பயன்பாடு', 'வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் பயங்கரவாதத்திற்கான நிதி' ‘பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதை தடுப்பது தொடர்பான சவால்களில் சர்வதேச ஒத்துழைப்பு’ ஆகிய நான்கு அமர்வுகளில் இந்த மாநாட்டில் விவாதங்கள் நடைபெறவுள்ளன.