பிரதமர் திரு. நரேந்திர மோடி பிப்ரவரி 17 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு துறை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டி, முக்கியமான சில திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
இந்த நிகழ்ச்சி காணொலி மூலமாக நடைபெறும். ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் இணைப்பு, சென்னை மணலியில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் கேசோலின் சல்பர் நீக்கப் பிரிவு (பெட்ரோலிய எரிபொருளில் கந்தகத்தை நீக்குதல்) ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.
நாகப்பட்டினத்தில் அமையவுள்ள காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் மூலம் சமூகப் பொருளாதார பயன்கள் அதிகரித்து, உர்ஜா தற்சார்பு நிலையை நோக்கி நாடு நடைபோட உதவி செய்யும். தமிழக ஆளுநர், முதல்வர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
திட்டங்களின் விவரம்
எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தில் ராமநாதபுரம் - தூத்துக்குடி பகுதி (143 கிலோ மீட்டர்) ரூ.700 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ளது. ஓ.என்.ஜி.சி. இயற்கை எரிவாயு உற்பத்தி வளாகங்களில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் வணிக பயன்பாட்டு நுகர்வோருக்கு கச்சா பொருளாக குழாய் மூலம் அளிக்க இது உதவும்.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், மணலி வளாகத்தில் கேசோலின் சல்பர் நீக்க வளாகம் ரூ.500 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. சுற்றுச் சூழலுக்கு உகந்த சல்பர் அளவு குறைவான கேசோலின் உற்பத்திசெய்வதன் மூலம், கழிவு வாயு வெளியாக்கம் குறைக்கப்பட்டு, சுத்தமான சுற்றுப்புறத்தை உருவாக்க உதவியாக இருக்கும்.
நாகப்பட்டினத்தில் அமையவுள்ள காவிரிப் படுகை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, ஆண்டுக்கு 9 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை கையாளும் திறன் கொண்டதாக இருக்கும்.
ஐ.ஓ.சி.எல். மற்றும் சி.பி.சி.எல். நிறுவனங்களின் கூட்டு முயற்சியாக சுமார் ரூ.31,500 கோடி செலவில் இத் திட்டம் செயல்படுத்தப்படும். பி.எஸ்.-6 வரையறைகளுக்கு உட்பட்டு மோட்டார் ஸ்பிரிட் மற்றும் டீசல் உற்பத்தி செய்வதுடன், மதிப்புகூட்டு பொருளாக பாலிபுரப்பலீன் உற்பத்தியும் செய்யப்படும்.