செயல்திறன்மிக்க ஆளுகை மற்றும் குறித்த நேரத்தில் திட்டப் பணிகள் செயலாக்கத்திற்கான பல்வகை அமைப்பான, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் அடிப்படையிலான 32 ஆவது பிரகதி (PRAGATI) அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம், பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில், 22 ஜனவரி 2020 அன்று நடைபெறவுள்ளது.
முந்தைய 31 ஆவது பிரகதி கலந்துரையாடல் கூட்டத்தில் 12 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் குறித்து பிரதமர் ஆய்வு செய்தார். 2019 ஆம் ஆண்டின் கடைசி பிரகதி கூட்டத்தில், 16 மாநிலங்கள் மற்றும் ஜம்மு கஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் செயல்படுத்தப்படும் ரூ.61,000 கோடி மதிப்பிலான 9 திட்டங்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய குடிமக்களின் கோரிக்கைகள், தேசிய வேளாண் சந்தை, முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பல்வேறு முன்முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
பன்னோக்கு மற்றும் பல்வகை ஆளுகை அமைப்பான பிரகதி, 25 மார்ச் 2015 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டது. ஒருங்கிணைந்த கலந்துரையாடல் அமைப்பான பிரகதி, சாமானிய மனிதனின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் உருவாக்கப்பட்டது. மத்திய அரசின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களையும், மாநில அரசுகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களையும் ஒரேநேரத்தில் கண்காணித்து ஆய்வு செய்ய பிரகதி உதவிகரமாக உள்ளது.