புதுதில்லியின் விக்யான் பவனில் ஜூலை 8, 2022 அன்று மாலை 6:30 மணிக்கு நடைபெற உள்ள அருண் ஜெட்லி நினைவு முதலாவது சொற்பொழிவு நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்ளவிருக்கிறார். நிகழ்ச்சியின் போது பிரதமர் உரையாற்றுவார்.
“உள்ளடக்கத்தின் வாயிலாக வளர்ச்சி, வளர்ச்சியின் மூலம் உள்ளடக்கம்” என்ற தலைப்பில் சிங்கப்பூர் அரசின் மூத்த அமைச்சர் திரு தர்மன் சண்முகரத்னம் இந்த நிகழ்ச்சியில் முக்கிய உரை வழங்குவார். அவரது சொற்பொழிவைத் தொடர்ந்து, திரு மத்தியாஸ் கார்மன் (பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான நிறுவனத்தின் பொதுச் செயலாளர்) மற்றும் திரு அரவிந்த் பனாகரியா (பேராசிரியர், கொலம்பியா பல்கலைக்கழகம்) ஆகியோர் தலைமையில் குழு விவாதம் நடைபெறும்.
திரு அருண் ஜெட்லி நாட்டிற்கு அளித்த விலைமதிப்பில்லா பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அருண் ஜெட்லி நினைவு முதலாவது சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஜூலை 8 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெற உள்ள கௌடில்யா பொருளாதார மாநாடு என்ற மூன்று நாள் நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் பிரதிநிதிகள் குழுவினருடனும் பிரதமர் உரையாற்றவிருக்கிறார். ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த திருமிகு அன்னே க்ரூஜர், லண்டன் பொருளியல் பள்ளியின் திரு நிக்கோலஸ் ஸ்டெர்ன், ஹார்வர்ட் கென்னடி பள்ளியின் திரு ராபர்ட் லாரன்ஸ், சர்வதேச நிதியத்தின் முன்னாள் மேலாண் இயக்குநர் திரு ஜான் லிப்ஸ்கி, இந்தியாவிற்கான உலக வங்கியின் இயக்குநர் திரு ஜுனைத் அகமது உள்ளிட்ட புகழ்பெற்ற பொருளியலாளர்கள் பிரதமரை சந்தித்துப் பேசுவார்கள். நிதியமைச்சகத்தின் ஆதரவோடு, பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தால் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.