பிரதமர் திரு.நரேந்திர மோடி, லக்னோ காவல்துறை தலைமையகத்தில் 20-21 நவம்பர், 2021-ல் நடைபெற உள்ள காவல்துறை தலைமை இயக்குனர்கள் (டிஜிபி-க்கள்) மற்றும் தலைமை ஆய்வாளர்கள் (ஐ.ஜி.க்கள்) மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இந்த இரண்டு நாள் மாநாடு, இரண்டு முறைகளிலும் நடைபெறும். மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் டிஜிபி-க்கள் மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் மத்தியக் காவல் அமைப்புகளின் தலைவர்களும், லக்னோவில் உள்ள மாநாட்டு வளாகத்தில் நேரடியாகக் கலந்துகொள்வார்கள், அதே வேளையில் மாநாட்டின் மற்ற அழைப்பாளர்கள், 37 வெவ்வேறு இடங்களிலுள்ள ஐபி/எஸ்ஐபி தலைமையகங்களில் இருந்தபடி காணொளி வாயிலாகக் கலந்து கொள்வார்கள். இந்த மாநாட்டில், இணையக் குற்றம், தரவு ஆளுகை, பயங்கரவாத எதிர்ப்பு சவால்கள், இடதுசாரி தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தலில் காணப்படும் புதிய போக்குகள், சிறைச்சாலை சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.
2014 முதல், டிஜிபி-க்கள் மாநாட்டில் பிரதமர் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறார். முன்பு பெயரளவிற்கு பங்கேற்றதைப் போன்று அல்லாமல், மாநாட்டின் அனைத்து அமர்வுகளிலும் பங்கேற்பதை ஒரு அம்சமாக அவர் கொண்டிருப்பதுடன், காவல்துறை தொடர்புடைய முக்கிய தகவல்கள் மற்றும் நாட்டைப் பாதிக்கக்கூடிய உள்நாட்டு பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, காவல்துறை உயர் அதிகாரிகள் பிரதமரிடம் நேரடியாக எடுத்துரைக்க வாய்ப்பளிக்கும் விதமாக, சுதந்திரமாகவும் அதிகாரப்பூர்வமற்ற வகையில் விவாதங்கள் மேற்கொள்வதையும் அவர் ஊக்குவித்து வருகிறார்.
பிரதமரின் தொலைநோக்கு எண்ணத்திற்கேற்ப, 2014 முதற்கொண்டு, வருடாந்திர மாநாடுகள், முன்பு தில்லியில் நடத்தப்படுவது வழக்கமாக இருந்ததை மாற்றி, தில்லிக்கு வெளியேயும் நடத்தப்பட்டு வருகிறது, 2020-ம் ஆண்டு மட்டும் காணொளி வாயிலாக நடத்தப்பட்டது. இந்த மாநாடு, 2014-ல் குவஹாத்தியிலும்; 2015-ல் கட்ச் வளைகுடா-விலும்; 2016-ல் ஐதராபாத்திலும்; 2017-ல் டெகான்பூரில் உள்ள பிஎஸ்எப் பயிற்சி மையத்திலும்; 2018-ல் கெவாடியாவிலும் மற்றும் 2019-ல் புனே ஐஐஎஸ்இஆர்-லும் நடத்தப்பட்டன.