புதுதில்லியில் உள்ள கரியப்பா அணிவகுப்பு மைதானத்தில் நாளை நடைபெறும் தேசிய மாணவர் படை(என்சிசி)யின் அணிவகுப்பு நிகழ்வில் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.
இந்த நிகழ்வில், பல்வேறு என்சிசி படைப்பிரிவுகளின் அணிவகுப்பைப் பார்வையிடும் பிரதமர், அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக்கொள்வார்.
கலை நிகழ்ச்சிகளோடு, என்சிசி படைப்பிரிவினர் சாகச விளையாட்டுகள், இசை, நிகழ்த்துக் கலைகள் போன்றவற்றில் தங்களின் திறமைகளைப் பிரதமர் முன்னிலையில் வெளிப்படுத்துவார்கள்.
என்சிசி படைப்பிரிவினரில் சிறந்து விளங்கியோருக்கு விருதுகள் வழங்கவிருக்கும் பிரதமர், அவர்களிடையே பின்னர் உரையாற்றுவார்.
குடியரசு தின முகாமிற்காக ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான என்சிசி மாணவர்கள் புதுதில்லிக்கு வருகிறார்கள். சென்ற ஆண்டு என்சிசி அணிவகுப்பு நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், இயற்கைச் சீற்றங்களின் போது, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளிலும், தூய்மை இந்தியா இயக்கம் போன்ற முன்முயற்சிகளிலும் அவர்களின் செயல்களைப் பாராட்டினார்.