பிரதமர் திரு நரேந்திர மோடி 2024, பிப்ரவரி 16 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ''வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்' நிகழ்ச்சியில் உரையாற்றவுள்ளார். இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.17,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து, நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். சாலைகள், ரயில்வே, சூரிய மின்சக்தி, மின் பகிர்மானம், குடிநீர் மற்றும் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல முக்கிய துறைகள் இந்தத் திட்டங்களில் அடங்கும்.
ராஜஸ்தானில் ரூ.5,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். தில்லி – மும்பை பசுமைச்சாலை இணைப்பு (தேசிய தேசிய விரைவுச்சாலை-4) அதாவது பாவோன்லி – ஜாலாய் சாலை முதல் முய் கிராமம் வரையிலான மூன்று தொகுப்புகளை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். ஹர்டோகஞ்ச் கிராமம் முதல் மெஜ் நதி பிரிவு, தக்ளியில் இருந்து ராஜஸ்தான் / மத்தியப்பிரதேசம் எல்லை வரை இந்தப் பிரிவுகள் இப்பகுதியில் விரைவான, மேம்பட்ட இணைப்பை வழங்கும். வன உயிரினங்களின் தடையற்ற நடமாட்டத்திற்கு ஏதுவாக விலங்குகளுக்கான சுரங்கப்பாதை, விலங்குகள் மேம்பாலம் ஆகியவை இப்பிரிவுகளில் கட்டப்பட்டுள்ளன. மேலும், வன உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்க ஒலிசத்தத் தடுப்புகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேபாரியில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் சித்தோர்கர் – உதய்பூர் நெடுஞ்சாலை பிரிவையும், கயா கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை 48-ல் உதய்பூர் – ஷாம்லாஜி பிரிவையும் இணைக்கும் 6 வழி பசுமை வழிச் சாலையையும் பிரதமர் தொடங்கி வைப்பார். இந்தப் புறவழிச்சாலை உதய்பூர் நகர நெரிசலைக் குறைக்க உதவும். ராஜஸ்தானில் ஜுன்ஜுனு, அபு ரோடு மற்றும் டோங்க் மாவட்டங்களில் சாலை உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.
இந்தப் பிராந்தியத்தில், ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், ராஜஸ்தானில் சுமார் ரூ.2,300 கோடி மதிப்பிலான எட்டு முக்கிய ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர், நிறைவுற்ற திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் இந்தத் திட்டங்களில் ஜோத்பூர்-ராய் கா பாக் - மெர்தா சாலை-பிகானீர் பிரிவு (277 கிலோமீட்டர்) உள்ளிட்ட ரயில் பாதைகளை மின்மயமாக்குவதற்கான பல்வேறு திட்டங்களும் அடங்கும். ஜோத்பூர்-பலோடி பிரிவு (136 கி.மீ); மற்றும் பிகானேர்-ரத்தன்கர்-சாதுல்பூர்-ரேவாரி பிரிவு (375 கி.மீ), 'கதிபுரா ரயில் நிலையத்தையும்' பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். இந்த ரயில் நிலையம் ஜெய்ப்பூரின் செயற்கைக்கோள் நிலையமாக உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு ரயில்கள் புறப்படும், நிறுத்தக்கூடிய 'முனைய வசதி' அமைக்கப்பட்டுள்ளது . பிரதமர் அடிக்கல் நாட்டும் ரயில் திட்டங்களில் பகத் கி கோதியில் (ஜோத்பூர்) வந்தே பாரத் தூங்கும் வசதி கொண்ட ரயில்களின் பராமரிப்பு வசதி; கதிபுராவில் (ஜெய்ப்பூர்) வந்தே பாரத், எல்.எச்.பி போன்ற அனைத்து வகையான பெட்டிகளையும் பராமரித்தல்; ஹனுமன்கரில் ரயில்களைப் பராமரிக்க பெட்டி பராமரிப்பு வளாகம் கட்டுதல்; பண்டிகுய் முதல் ஆக்ரா கோட்டை ரயில் பாதை வரை இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும். ரயில்வே துறை திட்டங்கள் ரயில் உள்கட்டமைப்பை நவீனப்படுத்துதல், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துதல், இணைப்பை மேம்படுத்துதல் மற்றும் பொருட்கள் மற்றும் மக்களின் போக்குவரத்தை மிகவும் திறமையாக எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
இந்தப் பிராந்தியத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், ராஜஸ்தானில் சுமார் ரூ.5300 கோடி மதிப்பிலான முக்கியமான சூரிய சக்தி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் உள்ள பார்சிங்சார் அனல் மின் நிலையத்திற்கு அருகில் நிறுவப்படவுள்ள 300 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டமான என்.எல்.சி.ஐ.எல் பார்சிங்சார் சூரிய மின்சக்தித் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பிகானேரில் உருவாக்கப்படவுள்ள மத்திய பொதுத்துறை நிறுவனத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் (டிரான்ச் -3) கீழ் என்எச்பிசி லிமிடெட் நிறுவனத்தின் 300 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்திற்கும் அவர் அடிக்கல் நாட்டுவார். ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் பகுதியில் உருவாக்கப்பட்ட 300 மெகாவாட் திறன் கொண்ட என்டிபிசி பசுமை எரிசக்தி நிறுவன நோக்ரா சூரியசக்தி பூங்கா திட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பார். சூரிய சக்தி திட்டங்கள் பசுமை சக்தியை உருவாக்கும், கரியமில வாயு உமிழ்வை ஈடுசெய்ய உதவுவதுடன் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
ராஜஸ்தானில் ரூ.2,100 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான மின் பகிர்மானத் திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இந்தத் திட்டங்கள் ராஜஸ்தானில் உள்ள சூரிய எரிசக்தி மண்டலங்களில் இருந்து மின்சாரத்தை வெளியேற்றுவதாகும், இதனால் இந்த மண்டலங்களில் உற்பத்தி செய்யப்படும் சூரிய சக்தியை பயனாளிகளுக்கு அனுப்ப முடியும். கட்டம்-2 பகுதி ஏ-யின் கீழ், ராஜஸ்தானில் சூரிய எரிசக்தி மண்டலங்களிலிருந்து மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின்பகிர்மான அமைப்பை வலுப்படுத்தும் திட்டம் (8.1GW) ராஜஸ்தானில் சூரிய சக்தி மண்டலங்களில் இருந்து மின்சாரத்தை வெளியேற்றுவதற்கான மின் பகிர்மான அமைப்பை வலுப்படுத்தும் திட்டம் (8.1 ஜிகாவாட்) கட்டம்-2 பகுதி-பி1; மற்றும் பிகானேர், ஃபதேஹ்கர்-II & பத்லா-II ஆகிய இடங்களில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு இணைப்பு வழங்குவதற்கான மின் பகிர்மான அமைப்பு ஆகியவை இத்திட்டங்களில் அடங்கும்.
ராஜஸ்தானில் தூய்மையான குடிநீர் வழங்குவதற்கான உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நீர்வள இயக்கத் திட்டங்கள் உட்பட சுமார் ரூ.2400 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்தத் திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள தனிநபர்களுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்புகள் வாயிலாக தூய்மையான குடிநீரை விநியோகிப்பதில் பிரதமரின் அர்ப்பணிப்பைக் குறிக்கின்றன.
ஜோத்பூரில் உள்ள இந்தியன் ஆயிலின் எல்பிஜி எரிவாயு நிரப்பும் ஆலையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கவுள்ளார். அதிநவீன உள்கட்டமைப்பு, செயல்பாடு மற்றும் பாதுகாப்பிற்கான தானியங்கி அமைப்புடன் கூடிய எல்பிஜி எரிவாயு நிரப்பும் ஆலை, வேலைவாய்ப்பை உருவாக்க வழிவகுத்து, அப்பகுதியில் உள்ள லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் எல்பிஜி தேவைகளைப் பூர்த்தி செய்யும்.
ராஜஸ்தானில் இந்த வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டிருப்பது, ராஜஸ்தானின் உள்கட்டமைப்பு கட்டமைப்பை மாற்றியமைக்கவும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான வாய்ப்புகளை உருவாக்கவும் பிரதமரின் இடைவிடாத முயற்சிகளைக் குறிப்பிடுகிறது.
ராஜஸ்தானின் அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 200 இடங்களில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய நிகழ்ச்சி ஜெய்ப்பூரில் நடைபெறும். மாநிலம் தழுவிய திட்டத்தில் பல்வேறு அரசு திட்டங்களின் லட்சக்கணக்கான பயனாளிகள் பங்கேற்பார்கள். இந்த நிகழ்ச்சியில் ராஜஸ்தான் முதலமைச்சர், ராஜஸ்தான் அரசின் பிற அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அளவிலான பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.