ஜனவரி 12ம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும், 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதிநாள் நிழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார். இந்நிகழ்சியில், தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவில், தேசியளவில் வெற்றி பெற்ற 3 பேர், தங்கள் கருத்துக்களை தெரிவிப்பர். மக்களவை சபாநாயகர், மத்திய கல்வி அமைச்சர் மற்றும் மத்திய இளைஞர் விவாகரம் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா
ஓட்டுப்போடவும், அரசுப் பணியில் சேரவும் அனுமதிக்கப்படும் 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட இளைஞர்களின் கருத்துக்களை கேட்பதே தேசிய இளைஞர் நாடாளுமன்ற திருவிழாவின் நோக்கம். கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நடந்த மனிதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் தெரிவித்த யோசனைப்படி நடத்தப்படுவதுதான் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா.
இந்த யோசனையில் இருந்து உத்வேகம், பெற்று, முதல் தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா, ‘‘புதிய இந்தியாவின் குரலாக இருங்கள் மற்றும் தீர்வு காணுங்கள் மற்றும் கொள்கைக்கு பங்களிப்பை தாருங்கள்’’ என்ற கருப்பொருளில் கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி முதல் பிப்ரவரி 27ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 88,000 இளைஞர்கள் பங்கேற்றனர்.
இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா 2020 டிசம்பர் 23ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கப்பட்டது. முதல் கட்ட நிகழ்ச்சியில், நாடு முழுவதிலும் இருந்து 2.34 லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர். அதைத் தொடர்ந்து மாநில அளவிலான இளைஞர் நாடாளுமன்றங்கள், 2021 ஜனவரி 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை காணொலி காட்சிமூலம் நடந்தது. இரண்டாவது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதி நிகழ்ச்சிகள், நாடாளுமன்ற மைய வளாகத்தில், ஜனவரி 11ம் தேதி நடக்கும். தேசிய அளவில் வெற்றி பெற்ற 29 பேர், மாநிலங்களவை எம்.பி திருமிகு ரூபா கங்குலி, மக்களவை எம்.பி திரு பர்வேஸ் சாஹிப் சிங் மற்றும் பிரபல பத்திரிக்கையாளர் திரு பிரஃபுலா கேத்கர் ஆகியோர் அடங்கிய நடுவர் குழு முன்பு பேசும் வாய்ப்பை பெறுவர். முதல் 3 வெற்றியாளர்கள், ஜனவரி 12ம் தேதி நடைபெறும் நிறைவு நாள் நிகழ்ச்சியில், பிரதமர் முன் பேசும் வாய்ப்பை பெறுவர்.
தேசிய இளைஞர் விழா
தேசிய இளைஞர் விழா, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை கொண்டாப்படுகிறது. சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12ம் தேதி, தேசிய இளைஞர் தினமாக கொண்டாப்படுகிறது. இந்தாண்டு தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழா, தேசிய இளைஞர் விழாவுடன் நடத்தப்படுகிறது.
நாட்டில் உள்ள இளைஞர்களை ஒன்றிணைத்து, அவர்களின் திறமைகளை வெளிப்படுத்துவதே, தேசிய இளைஞர் விழாவின் நோக்கம். நாட்டின் பல மாநில மொழி இன கலாச்சார பிரதிநிதிகள் இடம் பெறும் வகையில் ஒரு மினி இந்தியா போன்றதொரு சந்தர்ப்பத்தை உருவாக்கி அவர்களுக்கான அரங்கை வழங்குவதன் மூலம், அங்கு இளைஞர்கள் கலந்துரையாடி அவர்களின் சமூக, கலாச்சார தனிச்சிறப்பை பரிமாறிக் கொள்ள முடியும். இது தேசிய ஒற்றுமை, மத நல்லிணக்கம், சகோதரத்துவம், தைரியம் மற்றும் சாகசத்தை வளர்க்கும். ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற கருத்தையும், உணர்வையும் பரப்புவதே இதன் அடிப்படை நோக்கம்.
கொவிட்-19 காரணமாக, 24வது தேசிய இளைஞர் விழா காணொலி காட்சி முறையில் நடத்தப்படுகிறது. ‘‘இளைஞர்கள் - புதிய இந்தியாவின் உற்சாகம்’’ என்பதே இந்தாண்டு விழாவின் கருப்பொருள். புதிய இந்தியாவின் கொண்டாட்டத்தை இளைஞர்கள் ஏற்படுத்துகின்றனர். 24வது தேசிய இளைஞர் விழாவின் தொடக்க நிகழ்ச்சியும், 2வது தேசிய இளைஞர் நாடாளுமன்ற விழாவின் இறுதி நிகழ்ச்சியும், நாடாளுமன்ற மைய அரங்கில் 2021ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி நடைபெறும். 24வது தேசிய இளைஞர் விழாவின் நிறைவு நிகழ்ச்சி, புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 2021 ஜனவரி 16ம் தேதி நடைபெறும்.