பிரதமர் திரு நரேந்திர மோடி, குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில் 12 மே 2022 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள ‘முன்னேற்றப் பெருவிழா’வில் காணொலி வாயிலாக உரையாற்றவுள்ளார். தேவைப்படும் மக்களுக்கு குறித்த நேரத்தில் நிதியுதவி கிடைக்க வகைசெய்யும் மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்கள், இந்த மாவட்டத்தில் 100 சதவீதம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக இந்த பெருவிழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கணவனை இழந்த பெண்கள், முதியோர் மற்றும் ஆதரவற்ற மக்களுக்கு உதவி அளிக்கும் திட்டங்கள் மூலம் சம்மந்தப்பட்டவர்கள் முழுமையாக பயனடைவதை உறுதிசெய்யும் விதமாக அந்த மாவட்ட நிர்வாகம், இந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி முதல் மார்ச் 31-ந் தேதி வரை, ‘முன்னேற்ற முன்முயற்சி’ இயக்கத்தை மேற்கொண்டது. கங்கா ஸ்வரூபா ஆர்த்திக் சகாய் யோஜனா, இந்திரா காந்தி விருத் சகாய் யோஜனா, நிராதர் விருத் ஆர்த்திக் சகாய் யோஜனா மற்றும் ராஷ்ட்ரீய குடும்ப சகாய் யோஜனா ஆகிய 4 திட்டங்கள் வாயிலாக மொத்தம் 12,854 பயனாளிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இந்த இயக்கத்தின் போது, இத்திட்டத்தின் பலனை இதுவரை பெறாதவர்கள் இதுபற்றிய தகவலை அறிந்து கொள்ள தாலுகா வாரியாக வாட்ஸ்அப் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகராட்சிப் பகுதிகளின் அனைத்து வார்டுகளும் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அந்த இடத்திலேயே ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த இயக்கத்தை மேலும் முன்னெடுத்து செல்லும் விதமாக, முன்னேற்றத்திற்கான உதவியாளர்களாக செயல்பட்டவர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது.