இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் வெள்ளி விழா கொண்டாட்டங்களைக் குறிக்கும் நிகழ்ச்சியில் 2022 மே 17 அன்று காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுவார். இந்த விழாவைக் குறிக்கும் வகையில் அஞ்சல் தலை ஒன்றையும் பிரதமர் வெளியிடுவார்.
இந்த நிகழ்ச்சியின்போது ஐஐடி சென்னை தலைமையிலான எட்டு கல்வி நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள 5ஜி சோதனைக் கருவியையும் பிரதமர் வெளியிடுவார். இந்தத் திட்டத்தில் ஐஐடி தில்லி, ஐஐடிஹைதராபாத், ஐஐடிபம்பாய், ஐஐடிகான்பூர், ஐஐஎஸ்சி பெங்களூர் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் பங்கெடுத்துள்ளன. இந்தத் திட்டம் ரூ. 120 கோடிக்கும் அதிகமான செலவில் மேம்படுத்தப்பட்டது. இந்த சோதனைக் கருவி இந்திய தொழில்துறை மற்றும் புதிய தொழில் நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்கள், முன்மாதிரிகள், தீர்வுகள், கணினி பழுது நீக்குதல் போன்றவற்றை மதிப்பீடு செய்ய 5ஜி மற்றும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் உதவியாக இருக்கும்.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் 1997 மூலம் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் 1997ல் அமைக்கப்பட்டது.