புதுதில்லி டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுதேசிமயமாக்கல் நிறுவனத்தின் (என்.ஐ.ஐ.ஓ) ‘ஸ்வாவ்லம்பன்’ கருத்தரங்கில் ஜூலை 18-ஆம் தேதி பிரதமர் திரு நரேந்திர மோடி மாலை 4:30 மணிக்கு உரையாற்றுவார்.
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவது என்பது, தற்சார்பு இந்தியாவின் முக்கிய தூணாக உள்ளது. மேலும், இந்திய கடற்படையில் சுதேசிமயமாக்கல் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் ‘ஸ்பிரிண்ட் சவால்களை' நிகழ்ச்சியின்போது பிரதமர் அறிமுகப்படுத்துவார். விடுதலையின் 75 ஆண்டு அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக, பாதுகாப்பு புதிய கண்டுபிடிப்புகள் நிறுவனத்துடன் இணைந்து இந்திய கடற்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குறைந்தபட்சம் 75 புதிய தொழில்நுட்பங்கள்/ பொருட்களை சேர்ப்பது கடற்படைக்குரிய கண்டுபிடிப்புகள் மற்றும் சுதேசிமயமாக்கல் நிறுவனத்தின் நோக்கமாகும். இந்தக் கூட்டுத் திட்டம், ஸ்பிரிண்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது (ஐடெக்ஸ், என்.ஐ.ஐ.ஓ மற்றும் டி.டி.ஏ.சி வாயிலாக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் ஆதரவு).
பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடைவதை நோக்கி இந்திய தொழில்துறை மற்றும் கல்வித் துறையை ஊக்கப்படுத்துவது இந்தக் கருத்தரங்கின் நோக்கம். தொழில்துறை, கல்வித்துறை, சேவைகள், அரசு முதலியவற்றின் தலைவர்கள் ஒரு பொதுவான தளத்தில் ஒன்றிணைந்து, பாதுகாப்புத் துறைக்கான பரிந்துரைகளை உருவாக்குவதற்கான ஒரு தளத்தை இந்த இரண்டு நாள் கருத்தரங்கு (ஜூலை 18- 19) வழங்கும். புதிய கண்டுபிடிப்புகள், உள்ளூர்மயமாக்கல், ஆயுதம் மற்றும் விமான போக்குவரத்திற்கான பிரத்தியேக அமர்வுகள் நடைபெறும். சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) என்ற அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இந்திய பெருங்கடல் பகுதி சார்ந்த விஷயங்கள் கருத்தரங்கின் இரண்டாவது நாளன்று விவாதிக்கப்படும்.