புதுதில்லி விஞ்ஞான் பவனில் நாளை (30 ஜூலை 2022) காலை 10 மணியளவில் நடைபெறவுள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் அகில இந்திய அளவிலான முதலாவது கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார்.
மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் தேசிய அளவிலான முதலாவது கூட்டத்தை 30-31 ஜூலை 2022-ல் விஞ்ஞான் பவனில் நடத்த, தேசிய சட்டப்பணிகள் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணையங்களிடையே ஒற்றுமை மற்றும் ஒத்திசைவை ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த நடைமுறைகளை உருவாக்குவது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
நாட்டில் மொத்தம் 676 மாவட்ட சட்டப்பணிகள் ஆணையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆணையங்களின் தலைவராக மாவட்ட நீதிபதிகள் செயல்படுகின்றனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணையங்கள் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணையங்கள் வாயிலாக, பல்வேறு சட்ட உதவிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தேசிய சட்டப்பணிகள் ஆணையம் செயல்படுத்தி வருகிறது. தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தால் நடத்தப்படும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றங்களை முறைப்படுத்துவதன் வாயிலாக நீதிமன்றங்களின் சுமையை குறைப்பதில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருகின்றன.