மார்ச் 17அன்று புதுதில்லி பூசா வளாகத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மைய வளாகத்தில் நடைபெறவுள்ள வருடாந்திர வேளாண் வளர்ச்சித் திருவிழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
இந்த விழாவின்போது, விவசாயிகளிடையே உரையாற்றவுள்ள பிரதமர், இயற்கை வேளாண்மை பற்றிய இணையதளத்தை தொடங்கி வைத்து, 25 வேளாண் அறிவியல் மையங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். அத்துடன், விவசாயத் தொழிலாளர் விருது & பண்டிட் தீன் தயாள் உபாத்யாயா வேளாண் அறிவியல் ஊக்குவிப்பு விருதுகளையும் பிரதமர் வழங்குகிறார்.
2020ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது என்பதை மையக் கருத்தாகக் கொண்டு, இந்த விழா நடைபெறவுள்ளது. வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் பின்பற்றப்படும் நவீன தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், இந்த வேளாண் வளர்ச்சித் திருவிழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி நடைபெறும் கண்காட்சியில், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவது, நுண்ணீர்ப் பாசன நேரடி செயல் விளக்கம், கழிவுநீர் பயன்பாடு, கால்நடை மற்றும் மீன்வளம் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் விழாவின் முக்கிய அம்சமாக இடம்பெறும். இதுதவிர, விதைகள், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து பற்றிய அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன.