வரும் 19ம் தேதி காலை 11.15 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு, உரை நிகழ்த்துகிறார். கர்நாடக மாநில ஆளுநர் மற்றும் பல்கலைக்கழகத்தின் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். சிண்டிகேட் மற்றும் கல்வி குழுமத்தின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல் சபை உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகக் கலந்து கொள்வர்.
மைசூர் பல்கலைக்கழகம்:
1916ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி, மைசூர் பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இது நாட்டின் ஆறாவது மற்றும் கர்நாடக மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமாகும். 'அறிவுக்கு நிகர் எதுவுமில்லை' என்பதே இந்த பல்கலைக்கழகத்தின் குறிக்கோள். மைசூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான திரு நல்வாடி கிருஷ்ணராஜ வாடியார் மற்றும் திவான் சர் எம்.வீ. விஸ்வேஸ்வரையா ஆகியோரால் இந்த பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.