77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து உரையாற்றிய பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்தியாவின் ஏற்றுமதி வேகமாக உயர்ந்து வருவதாகவும், இந்தியா இதனை இப்போது நிறுத்தாது என்று உலக நாடுகள் கூறி வருவதாகவும் தெரிவித்தார். உலகத் தரவரிசை நிறுவனங்கள் இந்தியாவைப் பாராட்டுகின்றன. கொரோனாவுக்குப் பிந்தைய புதிய உலக ஒழுங்கில், இந்தியர்களின் திறன் அங்கீகரிக்கப்படுகிறது என்று அவர் கூறினார். உலகளாவிய விநியோகத் தொடர்கள் சீர்குலைந்த நேரத்தில், மனிதத் தேவைகளில் கவனம் செலுத்துவதன் மூலமாகவே தீர்வுகளை எட்ட முடியும் என்பதை நாங்கள் உலகிற்கு உணர்த்தினோம் என்று அவர் கூறினார். இந்தியா இன்று, வளரும் நாடுகளின் குரலாக மாறியுள்ளது என்றும், இந்தியப் பொருளாதாரம் இப்போது உலகளாவிய விநியோகத் தொடரின் ஒரு பகுதியாக உள்ளது என்றும், இது நிலைத்தன்மையை வழங்குகிறது என்றும் பிரதமர் கூறினார்.
ஸ்டார்ட் அப்கள் குறித்து பேசிய பிரதமர், இந்திய இளைஞர்கள் நாட்டை உலகின் முதல் மூன்று ஸ்டார்ட் அப் சூழல் அமைப்புகளில் ஒன்றாக வைத்துள்ளனர் என்றார். உலக இளைஞர்கள் இந்திய இளைஞர்களின் வளர்ச்சியையும், திறனையும் கண்டு வியப்படைகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார். இன்றைய உலகம் தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகிறது, தொழில்நுட்பத்தில் இந்தியாவிடம் உள்ள திறமையை வைத்துப் பார்க்கும்போது, உலகில் நாம் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். மிகவும் வளர்ந்த நாடுகளின் உலகத் தலைவர்கள் டிஜிட்டல் இந்தியாவின் வெற்றியை அங்கீகரித்துள்ளதாகவும், இந்த முன்முயற்சிகளைப் பற்றி மேலும் அறிய விரும்புவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.