ப்ரூ-ரியாங் உடன்பாடு மிசோராமில் 34000-க்கும் அதிகமான அகதிகளுக்கு உதவியும், நிவாரணமும் அளித்து 70 ஆண்டுகால பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளதாக புதிய பத்தாண்டின் மற்றும் இந்தப் புத்தாண்டின் முதலாவது மனதின் குரல் நிகழ்ச்சியில், பிரதமர் திரு. நரேந்திர மோடி தெரிவித்தார்.
“இந்தப் பிரச்சனை 90களைச் சேர்ந்தது. 1997ஆம் ஆண்டு இனங்களுக்கு இடையே ஏற்பட்ட நெருக்கடி, ப்ரூ ரியாங் பழங்குடியின மக்களை, மிஸோராமிலிருந்து வெளியேறி திரிபுராவில் தஞ்சம் அடைய நிர்பந்தித்தது. இந்த அகதிகள் வடக்குத் திரிபுராவின் கஞ்சன்பூர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். மிகவும் வலிதரும் விஷயம் என்னவென்றால், இந்த ப்ரூ ரியாங் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் அகதிகளாகத் தங்கள் வாழ்க்கையின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியை இழந்துவிட்டார்கள் என்பதுதான். முகாம்களில் தங்குவதன் பொருள் என்னவென்றால், அனைத்துவித அடிப்படை வசதிகளும் கிடைக்காமல் இருப்பது. 23 ஆண்டுகளாக வீடில்லை, நிலமில்லை, அவர்களின் குடும்பங்களுக்கு நோய் வந்தால் மருத்துவ சிகிச்சையில்லை, அவர்களின் குழந்தைகளுக்கு கல்விவசதிகள் இல்லை” என்று திரு மோடி பிரச்சினைகளை விவரித்துக் கூறினார்.
இந்தப் பிரச்சினைக்கும், அகதிகளின் வலிகளுக்கும் பல அரசுகள் தீர்வுகாணவில்லை என்று பிரதமர் கூறினார். இந்திய அரசியல் சட்டத்தின்மீது இந்த அகதிகள் வைத்த நம்பிக்கையை அவர் பாராட்டினார்.
தில்லியில் இந்த மாதம் கையெழுத்தான வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு வழிஏற்படும் என்பது அவர்களின் நம்பிக்கை என்றும் அவர் கூறினார்.
“இந்த நம்பிக்கையின் விளைவாக, அவர்களின் வாழ்க்கையில் இன்று ஒரு புதிய விடியல் பிறந்திருக்கிறது. ஒப்பந்தப்படி, இப்போது அவர்களால் ஒரு கண்ணியம் மிக்க வாழ்க்கையை வாழ்வதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. நிறைவாக, 2020ஆம் ஆண்டில் தொடங்கும் புதிய பத்தாண்டு, ப்ரூ ரியாங் சமூகத்தவரின் வாழ்க்கையில் புதிய நம்பிக்கை ரேகையைக் கொண்டுவந்துள்ளது” என்று அவர் குறிப்பிட்டார்.
“சுமார் 34,000 ப்ரூ அகதிகளுக்கு, திரிபுராவில் மறுவாழ்வு அளிக்கப்படும்.
அதுமட்டுமல்ல, அவர்களின் மறுவாழ்வுக்கும், முழுமையான வளர்ச்சிக்குமாக மத்திய அரசு சுமார் 600 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும். புலம் பெயர்ந்த ஒவ்வொரு குடும்பத்துக்கும் நிலம் அளிக்கப்படும். வீடு கட்டிக் கொள்ள அவர்களுக்கு உதவி செய்யப்படும். இத்துடன் அவர்களுக்கு உணவுப் பொருள்களுக்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். அவர்கள் இனி, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்களாலும் பயன்பெற முடியும்” என்று ஒப்பந்தத்தின் பயன்கள் பற்றி பிரதமர் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் தனித்தன்மையானது என்று கூறிய பிரதமர், ஒத்துழைப்புடன் கூடிய கூட்டாட்சி உணர்வின் அடையாளமாகவும் இது உள்ளது என்றார்.
“இந்த ஒப்பந்தம் இந்தியப் பண்பாட்டில் கலந்திருக்கும் கருணை உணர்வு மற்றும் நேசமான மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது” என்று அவர் தெரிவித்தார்.
வன்முறையைக் கைவிட்டு, மைய நீரோட்டத்திற்குத் திரும்புங்கள்
எந்தப் பிரச்சினைக்கும் வன்முறை தீர்வை அளிக்கமுடியாது என்று பிரதமர் கூறினார். தங்களின் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு, மைய நீரோட்டத்திற்குத் திரும்ப முடிவு செய்துள்ள அசாமின் 8 குழுக்களைச் சேர்ந்த 644 தீவிரவாதிகளை அவர் பாராட்டினார்.
“கேலோ இந்தியா விளையாட்டுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்த அசாம் மற்றொரு மகத்தான சாதனைக்கும் சான்றாக உள்ளது. ஒருசில நாட்களுக்குமுன், எட்டு தீவிரவாத குழுக்களைச் சேர்ந்த 644 தீவிரவாதிகள் தங்களின் ஆயுதங்களுடன் சரணடைந்துள்ளனர். வன்முறைப் பாதையில் பயணித்த அவர்கள், அமைதியில் தங்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தி நாட்டின் வளர்ச்சியில் பங்களிக்க முடிவு செய்து மைய நீரோட்டத்திற்குத் திரும்பியுள்ளனர்” என்று அவர் கூறினார்.
இதேபோல், திரிபுராவில் 80-க்கும் அதிகமானவர்கள் வன்முறைப் பாதையைக் கைவிட்டு, மைய நீரோட்டத்திற்குத் திரும்பியுள்ளனர் என்றும், வடகிழக்கில் கணிசமாக தீவிரவாதம் குறைந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தப் பகுதியின் ஒவ்வொரு பிரச்சினையும் பேச்சுவார்த்தை மூலம் நேர்மையாகவும், அமைதியாகவும் தீர்க்கப்பட்டிருப்பது இதற்கான பெரும் காரணம்” என்று அவர் கூறினார்.
இன்னமும் வன்முறைப் பாதையில் இருப்பவர்கள் மைய நீரோட்டத்திற்குத் திரும்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“பிரச்சினைகளை வன்முறை மற்றும் ஆயுதங்கள் மூலம் தீர்க்க விரும்புவோர் நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவர்களை மைய நீரோட்டத்திற்குத் திரும்புமாறு குடியரசு தின நன்னாளான இன்று, நான் கேட்டுக் கொள்கிறேன். பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வுகாண இவர்கள் தங்களின் திறமைகள் மீதும், நாட்டின் திறன்கள் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.