பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 செப்டம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தோனேஷிய அதிபர் திரு. ஜோகோ விடோடோ அழைப்பின் பேரில் பிரதமர் அந்நாட்டுக்குச் செல்கிறார்.
இந்த பயணத்தின்போது, ஆசியான் அமைப்பின் தற்போதைய தலைமைப் பொறுப்பை வகிக்கும் நாடு என்ற முறையில் இந்தோனேஷியா நடத்தும் 20-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொள்கிறார்.
நடைபெறவுள்ள ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு, 2022-ம் ஆண்டில் இந்தியா-ஆசியான் உறவுகளை ஒரு விரிவான உத்திசார் கூட்டு செயல்பாட்டு நிலைக்கு உயர்த்திய பின்னர் நடைபெறும் முதல் உச்சி மாநாடாகும். இந்த உச்சிமாநாடு இந்தியா-ஆசியான் உறவுகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து, எதிர்கால ஒத்துழைப்பு அம்சங்கள் குறித்து வரையறுக்கும்.
ஆசியான் நாடுகளின் தலைவர்கள் மற்றும் இந்தியா உள்ளிட்ட அதன் எட்டு பேச்சுவார்த்தை நாடுகளுக்கு, பிராந்திய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள கிழக்காசிய உச்சிமாநாடு ஒரு வாய்ப்பை வழங்கும்.