வணக்கம்!
ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அவர்களே, முதல் அமைச்சர் அசோக் கெலாட் அவர்களே, ராஜஸ்தான் பத்திரிகாவின் குலாப் கோதார் அவர்களே, பத்திரிகா குழுமத்தின் இதர பணியாளர்களே, ஊடக நண்பர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே!!!
சம்வாத் உபநிஷத் மற்றும் அக்ஷயத்ரா ஆகிய புத்தகங்களுக்காக குலாப் கோதாரி அவர்களுக்கும், பத்திரிகா குழுமத்துக்கும் வாழ்த்துகள். இலக்கியம் மற்றும் கலாச்சாரம் ஆகிய இரண்டுக்கும் இந்த புத்தகங்கள் பிரத்யேக பரிசுகளாகும். ராஜஸ்தானின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த வாயிலை திறந்து வைக்கும் வாய்ப்பும் எனக்கு இன்று கிடைத்துள்ளது. உள்நாட்டு பயணிகள் மட்டுமில்லாமல், சர்வதேச சுற்றுலாப் பயணிகளையும் பெருமளவில் இது ஈர்க்கும். இந்த முயற்சிக்காக உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நண்பர்களே,
எந்த ஒரு சமுகத்திலும், அதன் அறிவுசார்ந்த பிரிவை சேர்ந்த எழுத்தாளர்கள் வழிகாட்டிகள் போன்றவர்களாவார்கள். நம்முடைய பள்ளிப் படிப்பு ஒரு கட்டத்தில் முடிந்து விட்டாலும், கற்றல் என்பது வாழ்க்கை முழுவதும் ஒவ்வொரு நாளும் தொடர்கிறது. புத்தகங்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அதில் முக்கிய பங்குண்டு. நமது நாட்டில், இந்தியத்தன்மையும், தேசியவாதமும் எழுத்துகளின் தொடர் வளர்ச்சியோடு இணைந்துள்ளன.
சுதந்திர போராட்டத்தின் போது, தங்களது எழுத்துகள் மூலம் ஒவ்வொரு மூத்த சுதந்திர போராட்ட வீரரும் மக்களுக்கு வழிகாட்டியதாக விளங்கினர். புகழ்பெற்ற ஞானிகளும், விஞ்ஞானிகளும் கூட எழுத்தாளர்களாக இருந்ததை நாம் பார்த்திருக்கிறோம். இந்த பாரம்பரியத்தை உயிர்ப்போடு வைக்க நீங்கள் எடுத்து வரும் தொடர் முயற்சிகள் எனக்கு மகிழ்ச்சி அளிக்கின்றன. வெளிநாடுகளை கண்மூடித்தனமாக நாங்கள் பின்பற்ற மாட்டோம் என்று சொல்லும் துணிச்சல் ராஜஸ்தான் பத்திரிகா குழுமத்துக்கு இருப்பது பெரிய விஷயமாகும் இந்திய கலச்சாரத்துக்கும், இந்திய பண்பாட்டுக்கும், மதிப்புகளை பாதுகாப்பதற்கும் நீங்கள் முன்னுரிமை அளிக்கிறீர்கள்.
குலாப் கோதார் அவர்களின் புத்தகங்களான சம்வாத் உபநிஷத் மற்றும் அக்ஷயத்ரா ஆகியவை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகள் ஆகும். குலாப் கோதார் அவர்கள் இன்று பின்பற்றி வரும் பாரம்பரியத்தின் மீது தான் பத்திரிகா தொடங்கப்பட்டது. இந்தியத்துவத்துக்காகவும், இந்தியாவுக்கு சேவையாற்றுவதற்காகவும் பத்திரிகாவை கற்பூர் சந்திர குலிஷ் அவர்கள் தொடங்கினார். பத்திரிகைத் துறைக்கு குலிஷ் அவர்கள் ஆற்றிய பங்களிப்பை நாம் அனைவரும் நினைவு கூறுகிறோம், ஆனால் வேதங்களை சமூகத்துக்கு எடுத்து செல்லும் அவரது முயற்சிகள் மிகவும் அழகானவை. காலம் சென்ற குலிஷ் அவர்களை பல முறை சந்திக்கும் வாய்ப்புகளை நான் பெற்றேன். அவர் என்னை பெரிதும் விரும்பினார். நேர்மறைத்தன்மையின் மூலமே ஊடகவியல் முக்கியத்துவம் பெறும் என்று அவர் அடிக்கடி கூறுவார்.
நண்பர்களே,
ஒவ்வொரு பத்திரிகையாளரும், எழுத்தாளரும் நேர்மறை எண்ணங்களோடு பணிபுரிய வேண்டும் என்பதோடு, ஒவ்வொரு மனிதரும் நேர்மறை எண்ணங்களோடு பணிபுரிந்து தன்னால் ஆனதை சமூகத்துக்கு அளிக்க வேண்டும் பத்திரிகா குழுமமும், குலாப் கோதாரி அவர்களும் குலிஷ் அவர்களின் தத்துவம் மற்றும் உறுதியை தொடர்ந்து பின்பற்றுவதில் நான் திருப்தியடைகிறேன்.
நண்பர்களே,
2019 தேர்தல் முடிவுகளுக்கு பிறகு நாட்டு மக்களுக்கு நான் ஆற்றிய உரையை கேட்டபோது, அவரது வார்த்தைகளை 130 கோடி மக்களுக்கு நான் தெரிவித்தது போல் இருந்ததாக தன்னுடைய தலையங்கங்களில் ஒன்றில் குலாப் அவர்கள் தெரிவித்திருந்தார். கோதாரி அவர்களே, உங்களுடைய புத்தகங்களில் இருந்து எப்போதெல்லாம் உபநிஷத்துகள் மற்றும் வேதங்கள் பற்றிய சொற்பொழிவுகளை நான் புரிந்து கொள்கிறேனோ, அப்போதெல்லாம் என்னுடைய சொந்த கருத்துகளை படிப்பது போலவே சில சமயங்களில் நான் உணர்கிறேன்.
மனித குலத்தின் நலனைப் பற்றி கருத்துகள் சொல்வது யாராக இருந்தாலும், அனைவரின் மனங்களுக்கும் அவை நெருக்கமானவையே. அதனால் தான் நமது வேதங்களும், அவற்றில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளும் காலத்தை கடந்து நிற்கின்றன. இன்றைய டிவிட்டர் மற்றும் தகவல்கள் உலகில், கூர்மையான அறிவிடம் இருந்து விலகிச் சென்று விட வேண்டாம் என்று புதிய தலைமுறையை நான் கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர்களே,
உபநிஷத்துகள் மற்றும் வேதங்களைப் பற்றிய ஞானம் ஆன்மிக ஆர்வத்தை சார்ந்தது மட்டுமே அல்ல, அறிவியல் பார்வையும் தான். நிகோலா டெஸ்லா என்னும் பெயரை நாம் அனைவரும் கேட்டிருப்போம். டெஸ்லா இல்லாமல் நவீன உலகம் தற்போது இருப்பது போல் இருந்திருக்காது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்கு சென்றிருந்த போது, நிகோலா டெஸ்லாவை அவர் சந்தித்தார்.
உபநிஷத்துகளின் புரிதலையும், பிரபஞ்சத்தைப் பற்றி வேதாந்தங்களில் கூறப்பட்டிருக்கும் சாராம்சத்தையும் சுவாமி விவேகானந்தர் அவரிடம் கூறிய போது, டெஸ்லா ஆச்சரியமடைந்தார். இந்த அறிவின் மூலம் அறிவியலின் மர்மங்களை தன்னால் அவிழ்க்க முடியும் என்று டெஸ்லா கூறினார். இன்றைய இளைஞர்களும் இதை உணர வேண்டும். அக்ஷர் யாத்ரா மற்றும் சம்வாத் உபநிஷத் போன்ற புத்தகங்கள் இதற்கு உதவும்.
நண்பர்களே,
நமது மொழியின், கருத்துகளின் முதல் வடிவம் எழுத்து தான். எழுத்து என்பதற்கு சமஸ்கிருதத்தில் அழிக்க முடியாதது, என்றும் நிலைத்து நிற்பது என்பது பொருளாகும். முனிவர்கள், ஞானிகள், விஞ்ஞானிகள் மற்றும் தத்துவ மேதைகள் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் நமக்கு அளித்த அறிவும், கருத்துகளும் இன்றைக்கும் உலகத்துக்கு வழிகாட்டுகின்றன.
உலகத்தை புரிந்துகொண்டவரால் தான் தெய்வநிலையை அடைய முடியும் என்கிறது நமது வேதங்கள். உலகத்தை இந்தளவுக்கு புகழ்வது வேறெங்கும் காண முடியாது. இது தான் நமது இயல்பு. நம்முடைய பலத்தை நாம் புரிந்து கொள்ளும் போது, நமது முக்கியத்துவத்தையும், பொறுப்புகளையும் நாம் உணர்கிறோம்.
ஏழைகளுக்கு கழிவறை வசதி அளிக்கவும், அவர்களை பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாக்கவும் தூய்மை இந்தியா இயக்கம் தேவைப்பட்டது. தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை உஜ்வால் திட்டம் புகையில் இருந்து பாதுகாக்கிறது. ஜல் ஜீவன் திட்டம் ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீரை வழங்குகிறது.
மக்கள் சேவைக்காகவும், கொரோனாப் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கியதற்காகவும் இந்திய ஊடகத்துறையை நான் பாராட்டுகிறேன். கள அளவில் அரசு ஆற்றும் பணிகளைப் பற்றிய செய்திகளை மக்களுக்கு துடிப்புடன் ஊடகங்கள் வழங்கி வருவதோடு, அவற்றில் இருக்கும் குறைபாடுகளைப் பற்றியும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன.
நண்பர்களே,
உள்ளூர் தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கும் 'தற்சார்பு இந்தியா' பிரச்சாரத்துக்கு ஊடகங்கள் ஆதரவளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த லட்சியத்தை விரிவுபடுத்த வேண்டும். இந்தியப் பொருள்கள் சர்வதேச அளவை எட்டி வருகின்றன, இந்தியாவின் குரலும் உலகத்தை எட்ட வேண்டும்.
உலகம் தற்போது இந்தியாவை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்திய ஊடகத்துறையும் சர்வதேச அளவை எட்ட வேண்டும். சர்வதேச தகுதியுடைய பல்வேறு இலக்கிய விருதுகளை இந்திய நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
திரு கற்பூர் சந்திர குலிஷின் நினைவாக சர்வதேச பத்திரிகைத்துறை விருதை தொடங்கியதற்காக பத்திரிகா குழுமத்தை நான் பாராட்டுகிறேன்.