இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பஞ்சாப் ஆளுநர் திரு.வி.பி.சிங் பட்னோர் அவர்களே, முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் அவர்களே, எனது அமைச்சரவைத் தோழர்கள் திரு.கிஷண் ரெட்டி அவர்களே, திரு.அர்ஜூன்ராம் மெக்வால் அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, தியாகிகளின் குடும்ப உறுப்பினர்களே, சகோதர,சகோதரிகளே வணக்கம்!
துணிச்சல்மிக்க பஞ்சாப் மாநிலத்தையும், புனிதமான ஜாலியன்வாலா பாக் பூமியையும் நான் வணங்குகிறேன். விடுதலை வேள்வியில் கொடூரமாகக் கொன்று குவிக்கப்பட்ட பாரதமாதாவின் குழந்தைகளுக்கு நான் தலைவணங்குகிறேன். அந்த அப்பாவி சகோதர, சகோதரிகள், குழந்தைகள், எண்ணற்ற தாய்மார்களின் மீது பட்ட துப்பாக்கிக் குண்டுகளின் அடையாளங்கள் ஜாலியன்வாலாபாக் சுவர்களில் காணப்படுகின்றன. அவர்களது கனவுகள் அழிக்கப்பட்டன. அவர்கள் அனைவரையும் இன்று நாம் நினைவுகூர்கிறோம்.
நாட்டுக்காக உயிர்நீத்த சர்தார் உதம் சிங், சர்தார் பகத் சிங் போன்ற எண்ணிலடங்காப் புரட்சியாளர்களுக்கும், வீரர்களுக்கும் ஊக்கமளித்த இடம் ஜாலியன் வாலா பாக். 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியின் அந்த 10 நிமிடங்கள், நமது சுதந்திரப் போராட்டத்தின் அழியாத உண்மைக் கதையாக மாறிவிட்டது. அதன் காரணமாக, நாம் இன்று விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தைக் கொண்டாடுகிறோம். இது போன்ற ஒரு சந்தர்ப்பத்தில், நவீன ஜாலியன் வாலாபாக் நினைவிடத்தை, சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில் அர்ப்பணிப்பது, நமது அனைவருக்கும் உற்சாகமளிக்கும் ஒரு வாய்ப்பு. நான் இந்த புண்ணிய பூமிக்கு வரும் வாய்ப்பை பலமுறை பெற்றுள்ளேன். அப்போதெல்லாம் இந்தப் புனித இடத்தின் மண்ணை எடுத்து எனது நெற்றியில் இட்டுக் கொள்வேன். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு முன்பாக, புனித பைசாகியின் சந்தைகள் இந்த இடத்தில் நடைப்பெற்று வந்தன. சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டில், இந்த புதுப்பிக்கப்பட்ட ஜாலியன் வாலாபாக், புதிய தலைமுறையினருக்கு, இந்த புனித இடத்தின் வரலாற்றை நினைவு கூரும் . இதன் கடந்த கால சம்பவங்களை அறிய ஊக்குவிக்கும்.
நண்பர்களே! வரலாற்றைப் பாதுகாப்பது, ஒவ்வொரு நாட்டின் கடமையாகும். இது தான் நாம் முன்னேறிச் செல்லும் வழியை நமக்குக் காட்டுகிறது. கடந்த காலத்தில் நடந்த கொடூரங்களை மறப்பது எந்த நாட்டுக்கும் சரியானதல்ல. ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14ஆம் தேதியை பிரிவினையால் விளைந்த கொடூரங்களின் நினைவு தினமாக அனுசரிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்தியப் பிரிவினையின் போது, ஜாலியன் வாலாபாக் கொடூரங்களை இந்தியா கண்டது. பிரிவினையின் போது பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் பஞ்சாப் மக்கள். பிரிவினையின் போது, நாட்டின் ஒவ்வொரு மூலையிலும், குறிப்பாக பஞ்சாப் குடும்பங்களில் ஏற்பட்ட வலியை நாம் இன்னும் உணர்கிறோம்.
உலகில் எந்தப் பகுதியிலும், இந்தியர்கள் சிக்கலில் இருந்தாலும், இந்தியா தனது முழு பலத்தோடு, அவர்களுக்கு உதவத் துணை நிற்கும். கொரோனா காலமாக இருக்கட்டும், ஆப்கானிஸ்தான் பிரச்சினையாக இருக்கட்டும், இது போன்ற நெருக்கடிகளை உலகம் தொடர்ச்சியாகச் சந்தித்து வருகிறது. ஆபரேஷன் தேவி சக்தி மூலம், ஆப்கானிஸ்தானிலிருந்து நூற்றுக்கணக்கான நண்பர்கள் இந்தியா அழைத்துவரப்பட்டனர். இப்போதைய உலகளாவிய நிலவரங்கள், ஒரே பாரதம் - உன்னத பாரதத்தின் முக்கியத்துவத்தையும், தற்சார்பு இந்தியா, தன்னம்பிக்கை ஆகியவற்றின் தேவையையும் சுட்டிக் காட்டுகின்றன. இச்சம்பவங்கள், நாட்டின் அடித்தளத்தை வலுப்படுத்த வழிகாட்டுகின்றன.
நண்பர்களே, அம்ரித் மகோத்ஸவத்தில், சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஒவ்வொரு கிராமத்திலும் கொண்டாடி கவுரவிக்கப்படுகின்றனர். சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய காலகட்டங்களில் தொடர்புடைய இடங்களைப் பாதுகாக்கவும், தேசிய நாயகர்களை முன்னுக்குக் கொண்டு வரவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜாலியன் வாலா பாக் போல் நாடு முழுவதும் உள்ள தேசிய நினைவிடங்கள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
சுதந்திரத்துக்காக, நமது பழங்குடியின சமுதாயம் அதிகளவில் பங்களித்துள்ளதுடன், மிகச்சிறந்த தியாகங்களையும் செய்துள்ளது. அவர்களின் பங்களிப்பு வரலாற்றுப் புத்தகத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்க வேண்டும் ஆனால் இடம்பெறவில்லை இது வேதனைக்குரிய விஷயமாகும். நாட்டின் 9 மாநிலங்களில் சுதந்திரத்துக்காக பழங்குடியினர் போராடியதை அருங்காட்சியகங்களில் காட்டும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
நண்பர்களே, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த நமது வீரர்களுக்கு தேசிய நினைவிடம் அமைக்க வேண்டும் என நாடு விரும்பியது. அரசு அதனை உருவாக்கியுள்ளது. இன்றைய இளைஞர்களின் மனதில் நாட்டைப் பாதுகாக்கும் உணர்வையும், நாட்டுக்காக எதையும் தியாகம் செய்யும் உணர்வையும் தேசியப் போர் நினைவுச் சின்னம் தூண்டுகிறது.
நண்பர்களே, சுதந்திரத்தின் வைர விழாக் காலம், நாட்டுக்கு மிக முக்கியமானது. வைர விழாக் காலத்தில், பாரம்பரியம் மற்றும் வளர்ச்சியை ஒவ்வொருவரும் முன்னெடுத்துச் செல்லவேண்டும். குரு நானக் தேவ் அவர்களின் 550-வது ஜெயந்தியாக இருந்தாலும், குரு கோவிந்தசிங் அவர்களின் 350-வது ஜெயந்தியாக இருந்தாலும், குரு தேஜ்பகதூர் அவர்களின்400-வது அவதார தினமாக இருந்தாலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்கள் அனைத்தும் கடந்த ஏழு ஆண்டுகளில் தான் நடந்துள்ளன. அந்த வகையில்,பஞ்சாப் நமக்கு எப்போதும் எழுச்சி ஊட்டுகிறது,
நண்பர்களே, நாட்டின் சுதந்திர காலம் நாடு முழுமைக்கும் முக்கியமானதாகும். நமது பாரம்பரியத்தையும், வளர்ச்சியையும் ஒருங்கிணைத்து முன்னெடுக்க வேண்டியது நமது கடமையாகும். இன்று அனைத்து மட்டத்திலும், திசைகளிலும் பஞ்சாப் முன்னேறுவது அவசியம். இதற்காக நாம் அனைவரும், அனைவருக்காகவும், அனைவரின் முன்னேற்றத்துக்காகவும் ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். நாடு தனது இலக்குகளை விரைவில் நிறைவேற்றும் தீர்மானங்களுக்கு, ஜாலியன் வாலாபாக் பூமி தொடர்ந்து சக்தியை அளிக்க வேண்டும். இந்த எனது விருப்பத்துடன், உங்கள் அனைவருக்கும் இந்த நவீன நினைவுச் சின்னத்தின் வாயிலாக மீண்டும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி!