மேதகு தலைவர்களே,
இந்த ஆண்டின் சவால் மிக்க உலக, பிராந்திய சூழலுக்கு இடையே எஸ்சிஓ-வின் சிறப்பான தலைமை வகித்த அதிபர் மிர்சியோயேவுக்கு நான் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று உலகம் முழுவதும் பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்க சவால்களை எதிர்கொண்டுள்ள போது, எஸ்சிஓ-வின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. எஸ்சிஓ உறுப்பு நாடுகள் உலக ஜிடிபியில் சுமார் 30 சதவீதத்தை பங்களிக்கின்றன. உலக மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர் எஸ்சிஓ நாடுகளில் வசிக்கின்றனர். எஸ்சிஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே பெரும் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. பெருந்தொற்று, உக்ரைன் பிரச்சனை ஆகியவை உலக விநியோக சங்கிலியில் ஏராளமான தடைகளுக்கு காரணமாகி உள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. நமது பிராந்தியத்தில், நம்பிக்கையான, வலுவான பல்வேறு வகையான விநியோக சங்கிலிகளை உருவாக்க எஸ்சிஓ முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு சிறப்பான தொடர்புகளுடன் முழுமையான போக்குவரத்து உரிமைகளை வழங்குவது அவசியமாகும்.
மேதகு தலைவர்களே,
இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியாவின் இளம், திறமைமிக்க பணிப்படை இயல்பாகவே போட்டியை உருவாக்கி உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் இந்தாண்டு 7.5 சதவீதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் இதுவே அதிகமாக இருக்கும். எங்களது மக்களை மையப்படுத்திய வளர்ச்சி மாதிரியில் தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்துவதற்கு பெருமளவில் கவனம் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு துறையிலும் புதுமையை நாங்கள் ஆதரித்து வருகிறோம். இன்று இந்தியாவில் 70,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்-கள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்டவை யுனிகான் நிறுவனங்கள், எங்கள் அனுபவம் இதர எஸ்சிஓ நாடுகள் பலவற்றுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும். இந்த நோக்கத்திற்காக, ஸ்டார்ட் அப்-கள் புத்தாக்கம் குறித்த புதிய சிறப்பு பணிக்குழுவை உருவாக்குவதில், எங்களது அனுபவத்தை, எஸ்சிஓ உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.
மேதகு தலைவர்களே,
இன்று உலகம் மற்றொரு பெரிய சவாலை எதிர்கொண்டு வருகிறது. அது நமது மக்களின் உணவு பாதுகாப்பை உறுதி செய்வதாகும். இந்தப் பிரச்சனைக்கான எங்களது தீர்வு சிறுதானியங்களை சாகுபடி செய்து அவற்றை நுகர்வதை ஊக்குவிப்பதாகும். சிறு தானியங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சாகுபடி செய்யப்பட்டு வரும் அருமையான உணவாகும். எஸ்சிஓ நாடுகளில் மட்டுமல்லாமல் உலகின் மற்ற பகுதிகளிலும், இந்த பாரம்பரியமிக்க ஊட்டச்சத்து கொண்ட குறைந்த செலவிலான உணவு வகையை, உணவு நெருக்கடி மிக்க சூழலில் மாற்று உணவாக பயன்படுத்தலாம். 2023 ஆம் ஆண்டு ஐ.நா.வின் சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட உள்ளது. எஸ்சிஓ-வின் கீழ் சிறுதானிய உணவுத் திருவிழாவுக்கு ஏற்பாடு செய்வதை நாம் பரிசீலிக்க வேண்டும்.
இந்தியா உலகின் குறைந்த செலவிலான மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவுக்கான இடமாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருந்துகளுக்கான உலக மையம் குஜராத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இது உலக சுகாதார அமைப்பின் முதலாவது மற்றும் ஒரே பாரம்பரிய மருத்துவ மையமாகும். எஸ்சிஓ நாடுகளுக்கு இடையே பாரம்பரிய மருத்துவ ஒத்துழைப்பை நாம் அதிகரிக்க வேண்டும். இதற்காக பாரம்பரிய மருத்துவம் குறித்த புதிய எஸ்சிஓ பணிக்குழுவை அமைக்க இந்தியா முன்முயற்சி எடுக்கும்.
எனது உரையை நிறைவு செய்யும் முன்பாக இன்றைய கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காகவும், அன்பான விருந்தோம்பலுக்காகவும் அதிபர் மிர்சியோயேவுக்கு நான் மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி