பிரதமர் திரு நரேந்திர மோடி கொவிட் 19 நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் இன்று (27.04.2022) கலந்துரையாடினார்.
கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர், சில மாநிலங்களில் அண்மையில் கொவிட் பாதிப்பு அதிகரித்து வருவது குறித்தும், பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொவிட் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வது குறித்து எடுத்துரைத்தார்.
கொவிட் நிலவரம் குறித்து விரிவான விளக்கம் அளித்த மத்திய சுகாதாரத் துறை செயலாளர், உலகில் உள்ள பல்வேறு நாடுகளிலும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் அதேவேளையில் இந்தியாவிலும் சில மாநிலங்களில் பாதிப்பு அதிகரிப்பது குறித்து சுட்டிக்காட்டினார். மாநிலங்கள் முறையாக கண்காணிப்பதன் அவசியம் மற்றும் புள்ளி விவரங்களை சமர்ப்பிப்பது, வலுவான கண்காணிப்பை மேற்கொள்ளுதல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் மத்திய அரசால் வழங்கப்படும் நிதியை பயன்படுத்துவது குறித்தும் வலியுறுத்தினார்.
பெருந்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்தே உரிய காலத்தில் வழிகாட்டுதல்கள் மற்றும் ஒத்துழைப்பை வழங்கி வருவதற்காக பிரதமருக்கு மாநில முதலமைச்சர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டம் பிரதமரால் சரியான நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அந்தந்த மாநிலங்களில் கொவிட் பாதிப்பின் தற்போதைய நிலவரம் மற்றும் தடுப்பூசி செலுத்துவது குறித்தும் முதலமைச்சர்கள் விளக்கி கூறினர்.
வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் என்ற பிரதமரின் தாரக மந்திரம் தங்களது மாநிலத்தில் பின்பற்றப்படுவதாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் குறிப்பிட்டார். தேசிய தலைநகர் பிராந்தியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அதிகளவிலான பாதிப்பு காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். தில்லி முதலமைச்சர் பேசுகையில், சமீப நாட்களாக தில்லியில் தொற்று பாதிப்பு அதிகளவில் உள்ளதாக கூறினார். முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். பிரதமரின் வலுவான ஆதரவும் வழிகாட்டுதலும் முந்தைய அலைகளின் போது பாதிப்புகளை கடந்து வர பெரிதும் உதவியதாக மிசோரம் முதலமைச்சர் தெரிவித்தார். சுகாதாரம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக பிற அம்சங்களில் அளித்து வரும் ஆதரவுக்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். பிரதமர் காட்டிய வழிகாட்டுதல், அடுத்தடுத்த கொவிட் அலைகளை திறம்பட சமாளிக்க பேருதவி புரிந்ததாக கர்நாடக முதலமைச்சர் குறிப்பிட்டார். கொவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவது குறித்து, மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு பிரச்சாரம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார். ஹரியானா மாநிலத்தில் காணப்படும் தொற்று அதிகரிப்பு, தில்லியை சுற்றியுள்ள குருகிராம் மற்றும் பரிதாபாத் நகரங்களில்தான் காணப்படுவதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் தெரிவித்து, தமது நிறைவுரையை பிரதமர் தொடங்கினார். இந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கப்படும் என்றும் திரு மோடி அறிவித்தார்.
கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில் மத்திய மாநில அரசுகள் கூட்டாக மேற்கொண்டு வரும் முயற்சிகளை பிரதமர் சுட்டிக்காட்டினார். மாநில முதலமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் கொவிட் முன்களப் பணியாளர்கள் அனைவரும் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அவர்களுக்கு பிரதமர் தமது பாராட்டுதலை தெரிவித்தார். கொவிட் சவால் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதை அனைவரும் அறிவோம் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒமிக்ரான் மற்றும் அதன் உருமாற்றங்கள் சிக்கல்களை உருவாக்கலாம் என்பது பல்வேறு ஐரோப்பிய நாடுகளின் நிலவரம் மூலம் கண்கூடாக தெரிகிறது. துணை உருமாற்றம்தான் பல நாடுகளில் பாதிப்பை அதிகரிக்கிறது. பல நாடுகளைவிட இந்தியா தற்போதைய நிலவரத்தை திறம்பட கையாண்டு வருகிறது என்றும் அவர் கூறினார். கடந்த இருவாரங்களில் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்திருப்பது, நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஒமைக்ராம் பாதிப்பு உறுதிப்பாட்டுடன் பதற்றமின்றி கையாளப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், கடந்த இரண்டாண்டுகளில், சுகாதார கட்டமைப்பு மேம்பாடு, ஆக்ஸிஜன் அல்லது தடுப்பூசி விநியோகம் என கொவிட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் வலுப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 3-ஆவது அலையின் போது எந்த மாநிலத்திலும் நிலைமை மோசமடையவில்லை. பெரும் அளவில் தடுப்பூசி செலுத்தப்பட்டதே இதற்கு காரணம் என்றும் பிரதமர் தெரிவித்தார். தடுப்பூசி ஒவ்வொருவரையும் சென்றடைந்ததோடு, தகுதிவாய்ந்தவர்களில் 96 சதவீதம் பேர் முதல் தவணையையும், 15 வயதிற்கு மேற்பட்டோர் சுமார் 84 சதவீதம் அளவுக்கு இரண்டு தவணை தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டிருப்பது பெருமிதம் அளிக்கக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார். கொவிட்டுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களில் தடுப்பூசி மிகப்பெரிய அம்சமாக திகழ்கிறது என நிபுணர்கள் கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீண்டகாலத்திற்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்ட பிரதமர், சில இடங்களில் நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் பெற்றோர்கள் சிலர் கவலை கொண்டுள்ளனர். மேலும் மேலும் சிறார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வது குறித்து திருப்தி தெரிவித்தார். 12-14 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் இயக்கம் மார்ச் மாதத்தில் தொடங்கியது என்று கூறிய அவர், நேற்று தான் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான அனுமதி கிடைத்துள்ளது. “கூடிய விரைவில் தகுதியுள்ள அனைத்து சிறார்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது எங்களின் முன்னுரிமை ஆகும். இதற்காக ஏற்கனவே செய்தது போல் பள்ளிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுவதும் அவசியமாகும். இந்த விஷயத்தில் ஆசிரியர்களும், பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டும்” என்று பிரதமர் கூறினார். தடுப்பூசி பாதுகாப்பு கேடயத்தை வலுப்படுத்த நாட்டில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை டோஸ் கிடைக்க செய்ய வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் முன்னெச்சரிக்கை டோஸ் எடுத்து கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
3-வது அலையின் போது தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமான நோய் தொற்று இந்தியாவில் காணப்பட்டதாக கூறிய பிரதமர், அனைத்து மாநிலங்களும் நிலைமையை சரியாக கையாண்டு, சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் தொடரவும் அனுமதித்தன. இந்த சமச்சீரான உத்தி பற்றிய தகவல் எதிர்காலத்திற்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களால் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்களின் ஆலோசனைகளுக்கேற்ப செயல்பட்டு வருவதாகவும் பிரதமரிடம் தெரிவிக்கப்பட்டது. “தொற்றினை தொடக்கத்திலேயே தடுப்பது எங்களின் முன்னுரிமையாக இருந்தது. இப்போதும் கூட இது நீடிக்க வேண்டும். பரிசோதனை தொடர்பு கண்டறிதல் சிகிச்சை என்ற நமது உத்தியின் அமலாக்கம் அதே வேகத்துடன் இருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
கடுமையான பாதிப்புள்ள நோயாளிகளை நூறு சதவீதம் பரிசோதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய பிரதமர், பொது இடங்களில் கொவிட் விதிமுறைகள் சரியாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். பீதியை தவிர்க்க வேண்டும் என்றார். சுகாதார அடிப்படை கட்டமைப்பு மற்றும் மருத்துவ பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அரசியல் அமைப்பு சட்டத்தின் குறிப்பிடப்பட்டுள்ள ஒத்துழைப்புமிக்க கூட்டமைப்பு உணர்வுடன் கொரோனாவுக்கு எதிரான நீண்ட போராட்டத்தை இந்தியா நடத்தியுள்ளது என்று பிரதமர் கூறினார். தற்போதைய உலகளாவிய நிலவரத்தில் பொருளாதார முடிவுகள் எடுப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கிடையேயான ஒத்துழைப்பின் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார். உலகளாவிய நிகர்வுகளால் திணிக்கப்பட்ட நிலைமைகளுக்கு ஒத்துழைப்புமிக்க கூட்டமைப்பின் உணர்வு மிகமுக்கியமானதாக மாறியுள்ளது என்று அவர் கூறினார். பெட்ரோல், டீசல் விலை பின்னணியில் அவர் இதை விளக்கினார்.
பெட்ரோல், டீசல் விலையின் சுமையை குறைப்பதற்காக மத்திய அரசு கலால் வரியை குறைத்தது என்று கூறிய பிரதமர், வரிகளை குறைக்குமாறு மாநில அரசுகளையும் கேட்டுக் கொண்டது என்றார். சில மாநிலங்கள் வரிகளை குறைத்தன. ஆனால் சில மாநிலங்கள் இந்த பயன்களை மக்களுக்கு அளித்திடவில்லை என்று அவர் கூறினார். இதனால் இத்தகைய மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்தது என்று அவர் தெரிவித்தார். இது மாநில மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்ல, அண்டை மாநிலங்களையும் பாதிப்பதாகும். வருவாய் இழப்பு ஏற்பட்ட போதும் மக்கள் நலனுக்காக கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்கள் வரிக்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டன என்று கூறிய அவர், இவற்றின் அண்டை மாநிலங்கள் வருவாய் ஈட்டியதே தவிர, வரியை குறைக்கவில்லை என்றார்.
அதே போல் கடந்த நவம்பர் மாதம் மதிப்பு கூடுதல் வரியை குறைக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட போதும், சில காரணங்களுக்காக மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், தெலங்கானா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு, கேரளா, ஜார்கண்ட் போன்ற பல மாநிலங்கள் இதனை செய்யவில்லை என்று பிரதமர் கூறினார். மத்திய அரசின் வருவாயில் 42 சதவீதம் மாநில அரசுகளுக்கு செல்கிறது என்று பிரதமர் தெரிவித்தார். “உலகளாவிய நெருக்கடி உள்ள இந்த தருணத்தில், ஒத்துழைப்புமிக்க கூட்டமைப்பு உணர்வை பின்பற்றுமாறும் ஒரு அணியாக அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன்” என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.
அதிகரிக்கும் வெப்பநிலை, காடுகள் மற்றும் கட்டிடங்களில் அதிகரிக்கும் தீவிபத்து சம்பவங்கள் பற்றியும் பிரதமர் குறிப்பிட்டார். மருத்துவமனைகளில் தீவிபத்து பாதுகாப்பு தணிக்கைகள் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இந்த சவால்களை சந்திப்பதற்கான நமது ஏற்பாடுகள் ஒருங்கிணைந்த முறையில் இருக்க வேண்டும் என்றும் நமது தீர்வுகாணும் நேரம் குறைந்த அளவில் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.