எனது அன்பு நண்பர் மாண்புமிகு அதிபர் விளாடிமிர் புடின் அவர்களே, 21-வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சி மாநாட்டிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன், உங்கள் குழுவினரையும் வரவேற்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா காலத்தில் நீங்கள் மேற்கொண்ட இரண்டாவது வெளிநாட்டுப் பயணம் இது என்பது எனக்குத் தெரியும். இந்தியாவுடனான உங்கள் பற்றும் தனிப்பட்ட அர்ப்பணிப்பும் இந்தியா-ரஷ்யா உறவுகளின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்துகின்றன, அதற்காக நான் உங்களுக்கு மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
கொவிட் சவால்களுக்கு இடையிலும், இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான உறவுகளின் ஆழம் மாறவில்லை. நமது கூட்டு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. தடுப்பூசி சோதனைகள் மற்றும் தயாரிப்பில், மனிதாபிமான உதவியில் மற்றும் குடிமக்களை திருப்பி அனுப்புவதில் கொவிட்டுக்கு எதிரான போராட்டம் இரு நாடுகளுக்கும் இடையே சிறந்த ஒத்துழைப்பைக் கண்டுள்ளது.
மாண்புமிகு அதிபர் அவர்களே,
2021-ம் ஆண்டு நமது இருதரப்பு உறவுகளுக்கு பல வழிகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 1971-ம் ஆண்டின் அமைதி, நட்பு மற்றும் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஐந்து தசாப்தங்கள் மற்றும் நமது யுக்தி சார்ந்த கூட்டின் இரண்டு தசாப்தங்களை இந்த ஆண்டு குறிக்கிறது. கடந்த 20 வருடங்களாக நமது கூட்டு அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு நீங்கள் முக்கிய உந்துதலாக இருப்பதால், இந்த சிறப்பான ஆண்டில் மீண்டும் உங்களுடன் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த பல தசாப்தங்களில் உலக அளவில் பல அடிப்படை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நிறைய புவிசார் அரசியல் சமன்பாடுகள் உருவாகியுள்ளன. ஆனால் இந்தியா-ரஷ்யா நட்பு இந்த அனைத்து மாறுபாடுகளுக்கும் இடையே நிலையானதாக இருக்கிறது. இரு நாடுகளும் எந்தவித தயக்கமும் இன்றி பரஸ்பரம் ஒத்துழைத்து வருவது மட்டுமல்லாமல், பரஸ்பர உணர்திறனில் சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன. இது உண்மையிலேயே நாடுகளுக்கு இடையேயான நட்பின் தனித்துவமான மற்றும் நம்பகமான மாதிரியாகும்.
மாண்புமிகு அதிபர் அவர்களே,
2021-ம் ஆண்டு நமது யுக்தி சார்ந்த கூட்டாண்மைக்கும் சிறப்பான ஒன்றாகும். நமது வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையிலான 2+2 பேச்சுவார்த்தையின் தொடக்க கூட்டம் இன்று நடைபெற்றது. நமது நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்த புதிய செயல்முறையை இது தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தான் மற்றும் பிற பிராந்திய பிரச்சனைகளிலும் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். கிழக்குப் பொருளாதார மன்றம் மற்றும் விளாடிவோஸ்டாக் உச்சிமாநாட்டுடன் தொடங்கிய பிராந்திய கூட்டுறவு இன்று ரஷ்ய தூர-கிழக்கு மற்றும் இந்திய அரசுகளுக்கு இடையே உண்மையான ஒத்துழைப்பாக மாறி வருகிறது.
பொருளாதாரத் துறையில் நமது உறவை ஆழமாக்குவதற்கு நீண்ட காலப் பார்வையையும் நாம் பின்பற்றுகிறோம். 2025-ம் ஆண்டிற்குள் 30 பில்லியன் டாலர் வர்த்தகம் மற்றும் $50 பில்லியன் முதலீட்டை இலக்காக நிர்ணயித்துள்ளோம். இந்த இலக்குகளை அடைய நமது வணிக சமூகங்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
மாண்புமிகு அதிபர் அவர்களே,
மீண்டும் ஒருமுறை, நான் உங்களை இந்தியாவிற்கு வரவேற்கிறேன், உங்கள் பிரதிநிதிகளை வரவேற்கிறேன். மிக்க நன்றி.