ஃபிஜி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி வாயிலாக உரையாற்றினார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த மருத்துவமனையை அமைத்ததற்காக ஃபிஜி பிரதமருக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, இந்த மருத்துவமனை இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவின் சின்னமாகவும், இந்தியா மற்றும் ஃபிஜி இடையிலான பகிர்ந்து கொள்ளப்பட்ட பயணத்தின் மற்றுமொரு அத்தியாயமாகவும் திகழ்கிறது என்றார். குழந்தைகளுக்கான இந்த இதய நோய் மருத்துவமனை, ஃபிஜி நாட்டில் மட்டுமின்றி ஒட்டுமொத்த தென் பசிபிக் பிராந்தியத்திலும் அமைந்துள்ள முதலாவது மருத்துவமனை. “இந்த பிராந்தியத்தில் இதய நோய் பெரும் சவாலாக உள்ள நிலையில், இந்த மருத்துவமனை, ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு புதுவாழ்வுக்கான வழியை காட்டும்”. குழந்தைகள் உலகத் தரம் வாய்ந்த சிகிச்சையை பெறுவதோடு, அனைத்து அறுவை சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்படுவது குறித்து மனநிறைவு தெரிவித்த அவர், இந்த சிகிச்சையை வழங்குவதற்காக ஃபிஜி நாட்டின் சாய் பிரேம் அறக்கட்டளை, ஃபிஜி அரசு மற்றும் இந்தியாவின் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவினி மருத்துவமனையையும் பாராட்டினார்.
தலைசிறந்த ஆன்மிகவாதியான ஸ்ரீ சத்ய சாய் பாபாவுக்கு தலை வணங்குவதாக குறிப்பிட்ட பிரதமர், மனித சேவைக்கு அவர் தூவிய வித்து, ஆலமரம் போல் செழித்து வளர்ந்து ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சேவையாற்றி வருவதாக கூறினார். “சடங்குகளில் இருந்து ஆன்மிகத்தை விடுவித்த ஸ்ரீ சத்ய சாய் பாபா, அதனை மக்கள் நலனுடன் இணைத்தவர் என்றும் பிரதமர் நினைவுகூர்ந்தார். கல்வி, சுகாதாரம், ஏழைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினருக்காக அவர் ஆற்றிய பணிகள் இன்றும் நம்மை ஊக்குவிக்கிறது”. குஜராத் நிலநடுக்கத்தின்போது, சாய் பக்தர்கள் ஆற்றிய சேவைகளையும் திரு மோடி நினைவுகூர்ந்தார். “சத்ய சாய்பாபாவின் ஆசிகளை அடிக்கடி பெற்றது, எனக்கு கிடைத்த பெரும் வாய்ப்பாக கருதுவதோடு, இப்போது கூட அவரது ஆசிகளை பெற்று வருகிறேன்” என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியா – ஃபிஜி நட்புறவின் பகிர்ந்து கொள்ளப்பட்ட பாரம்பரியம் மனித குல சேவையை அடிப்படையாகக் கொண்டது என்றும் பிரதமர் கூறினார். இந்த நற்பண்பின் அடிப்படையில் பெருந்தொற்று காலத்தில் இந்தியா தனது கடமைகளை நிறைவேற்றியதோடு, 150 நாடுகளுக்கும் மருந்துப் பொருட்களையும், சுமார் 100 நாடுகளுக்கு, சுமார் 100 மில்லியன் தடுப்பூசிகளையும் வழங்கியிருக்கிறது. இதுபோன்ற முயற்சிகளில் ஃபிஜி நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவின் ஆழம் வலுப்படுத்தப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார். இருநாடுகளையும் பெருங்கடல் பிரித்தாலும், பரஸ்பர மரியாதை மற்றும் இருநாட்டு மக்கள் இடையேயான வலுவான நட்புறவின் அடிப்படையில் அமைந்த நமது கலாச்சாரம் மற்றும் நமது உறவுகள் நம்மை இணைக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். ஃபிஜி நாட்டின் சமூக – பொருளாதார வளர்ச்சியில், இந்தியா தொடர்ந்து முன்னுரிமை அளிப்பதற்கான வாய்ப்பை பெரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஃபிஜி பிரதமர் ஃபிராங்க் பைனிமா ராமாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுவதை யொட்டி, அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், அவரது தலைமையில் இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவு தொடர்ந்து வலுவடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.