அமெரிக்க அதிபர் ஜோசப் ஆர் பைடனின் அழைப்பை ஏற்று, இரண்டாவது உலகளாவிய கொவிட் காணொலி உச்சிமாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். ‘பெருந்தொற்று சோர்வைத் தடுப்பது மற்றும் தயார்நிலைக்கு முன்னுரிமை அளித்தல்’ என்ற கருப்பொருளில் உச்சிமாநாட்டின் துவக்க அமர்வில் பிரதமர் உரையாற்றினார்.
பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த மக்களை மையமாகக் கொண்ட உத்தியை இந்தியா பின்பற்றியதை சுட்டிக்காட்டிய பிரதமர், இதுவரை இல்லாத வகையில் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுகாதாரத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கி உள்ளதாகவும் கூறினார். உலகின் மாபெரும் தடுப்பூசித் திட்டத்தை இந்தியா செயல்படுத்துவதாகவும், சுமார் 90% முதிர் அகவையினர் மற்றும் 50 மில்லியன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
சர்வதேச சமூகத்தின் பொறுப்புள்ள உறுப்பினராக குறைந்த விலையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பிற்கான தொழில்நுட்பங்கள், தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகளை இதர நாடுகளுடன் இந்தியா தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் என்று பிரதமர் கூறினார். இந்தியா தனது மரபணு கண்காணிப்பு கூட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பாரம்பரிய மருத்துவமுறைகளை அதிக அளவில் இந்தியா பயன்படுத்தியுள்ளதுடன், இந்த மருத்துவ அறிவை உலக நாடுகளுக்கு கிடைக்கச் செய்வதற்காக பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பு மையத்தை இந்தியாவில் தொடங்குவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
உலகளாவிய சுகாதார பாதுகாப்பு கட்டமைப்பை வலிமையான மற்றும் நெகிழ்திறன் வாய்ந்ததாக உருவாக்குவதற்கு உலக சுகாதார அமைப்பை வலுப்படுத்தவும், சீர்திருத்தவும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
காரிகோம் (CARICOM) இன் தலைவராக பெலிஸ் மாநில/அரசுத் தலைவர்கள், ஆப்பிரிக்க ஒன்றியத்தின் தலைவராக செனேகல், ஜி20 இன் தலைவராக இந்தோனேசியா, ஜி7 தலைவராக ஜெர்மனி ஆகிய நிகழ்ச்சியின் இணை ஏற்பாட்டாளர்கள் இதில் கலந்து கொண்டனர். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர், உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் மற்றும் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர்.
செப்டம்பர் 22, 2021 அன்று அதிபர் பைடனால் நடத்தப்பட்ட முதலாவது உலகளாவிய கொவிட் காணொலி உச்சிமாநாட்டிலும் பிரதமர் கலந்து கொண்டிருந்தார்.