ஆகஸ்ட் 24 , 2023 அன்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா மக்கள் தொடர்பு மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.
இக்கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுடன் ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
பிரிக்ஸ் அமைப்பு, உலகளாவிய தெற்கின் குரலாக இருக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார். ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் நெருக்கமான கூட்டாண்மையை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், உத்தேச திட்டம் 2063 இன் கீழ் ஆப்பிரிக்காவின் வளர்ச்சிப் பயணத்தில் ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
பல துருவ உலகை வலுப்படுத்த மேலும் ஒத்துழைப்புக்கு அழைப்பு விடுத்த பிரதமர், உலகளாவிய நிறுவனங்களை பிரதிநிதித்துவமாகவும், பொருத்தமானதாகவும் வைத்திருக்க அவற்றை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். பயங்கரவாத எதிர்ப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, சைபர் பாதுகாப்பு, உணவு மற்றும் சுகாதார பாதுகாப்பு மற்றும் நெகிழ்வான விநியோக சங்கிலி ஆகிய துறைகளில் ஒத்துழைக்குமாறு தலைவர்களை அவர் கேட்டுக்கொண்டார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி, ஒரு சூரியன் ஒரு உலகம் ஒரு தொகுப்பு, பேரழிவைத் தாங்கும் உள்கட்டமைப்புக்கான கூட்டணி, ஒரு பூமி ஒரு சுகாதாரம், புலிகள் கூட்டணி மற்றும் பாரம்பரிய மருத்துவத்திற்கான உலகளாவிய மையம் போன்ற சர்வதேச முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக இருக்குமாறு நாடுகளுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு இருப்பை பகிர்ந்து கொள்ளவும் அவர் முன்வந்தார்.