மேன்மை தங்கியவர்களே,
குறுகிய கால இடைவெளியில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சிறப்புக் கலந்துரையாடலில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க நான் விரும்புகிறேன்.
அண்மையில் அறுவைச் சிகிச்சை நடந்த நிலையில், உடனடியாக இதில் கலந்து கொண்டுள்ள நமது நண்பர் பிரதமர் ஒளிக்கு நான் சிறப்புமிக்க நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விரைந்து குணமடைய வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். அதிபர் அஷ்ரப் கனி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன்.
இன்று நம்மிடையே கலந்து கொண்டுள்ள சார்க் அமைப்பின் புதிய பொதுச்செயலாளரையும் நான் வரவேற்கிறேன். காந்திநகரிலிருந்து பங்கேற்றுள்ள சார்க் பேரிடர் மேலாண்மை மையத்தின் இயக்குநரையும் நான் வரவேற்கிறேன்.
மேன்மை தங்கியவர்களே,
கொவிட்-19 தொற்றை அண்மையில் உலக சுகாதார அமைப்பு கொள்ளை நோயாக அறிவித்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இதுவரை, நமது பிராந்தியத்தில் சுமார் 150 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். நமது சார்க் பிராந்தியம் அனைத்துத் தரப்பு மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினரின் இருப்பிடமாக உள்ளது. மிக அதிக மக்கள் வசிக்கும் பகுதியாகவும் இருக்கிறது. வளர்ந்து வரும் நாடுகள் என்ற முறையில், மருத்துவ வசதிகளைப் பெறுவதில் நம் அனைவருக்கும் குறிப்பிடத்தக்க சவால்கள் உள்ளன. நமது மக்களுக்கிடையிலான உறவுகள் தொன்மையானவை. நமது சமுதாயங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்தவை, எனவே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒருங்கிணைந்து செயல்பட்டு, ஒருமித்த வெற்றியைப் பெறுவதற்கு தயாராக வேண்டும்.
மேன்மை தங்கியவர்களே,
இந்தச் சவாலை எதிர்கொள்ள நாம் தயாராகும் நிலையில், இதுவரை இந்தத் தொற்று பரவாமல் தடுப்பதில், இந்தியாவுக்கு எற்பட்ட அனுபவங்களை நான் சுருக்கமாக பகிர்ந்து கொள்கிறேன்.
“தயராகுங்கள், பீதியடைய வேண்டாம்” என்பதே எங்களது தாரக மந்திரம். இந்தப் பிரச்சினையை ஒருபோதும், குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதில், கவனமாக இருந்ததுடன், தேவையற்ற கருத்துக்களையும் தவிர்த்தோம். படிப்படியான முறைகளில், தீவிர நடவடிக்கைகளில் இறங்கி, நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டோம். ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில், இந்தியாவுக்குள் வருபவர்களை பரிசோதிக்க ஆரம்பித்தோம். அதேசமயம் பயணத்துக்கான கட்டுப்பாடுகளை படிப்படியாக அதிகரித்தோம். இந்தப் படிப்படியான அணுகுமுறை அச்சத்தைத் தவிர்க்க எங்களுக்கு உதவியது. தொலைக்காட்சி, அச்சு ஊடகம், சமூக ஊடகம் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் பிரச்சாரங்களை அதிகரித்தோம்.
தொற்று ஏற்படும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் சிறப்பு முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டோம். நாடு முழுவதும் உள்ள எங்களது மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சிகள் மூலம் விரைவாக பரிசோதிக்கும் திறனை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை எடுத்தோம். நோய் கண்டறியும் திறனையும் நாங்கள் அதிகரித்தோம். இரண்டு மாதங்களுக்குள் 60க்கும் மேற்பட்ட பரிசோதனைக் கூடங்கள் மூலமாக இந்த வசதியைப் பெற்றுள்ளோம்.
இந்த நோயை எதிர்கொண்டு கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடைமுறைகளை உருவாக்கியுள்ளோம். நுழைவு இடங்களில் பரிசோதனை, தொற்று பாதித்துள்ள சந்தேகத்திற்கு இடமானவர்களை கண்டறிதல், அவர்களை தனி இடத்தில் பராமரித்தல், சிகிச்சைக்கு பின்னர் வீட்டுக்கு அனுப்புதல் போன்றவற்றை மேற்கொண்டு வருகிறோம்.
வெளிநாடுகளில் உள்ள எங்களது மக்களின் அழைப்புகளுக்கும் நாங்கள் பதில் அளித்து வருகிறோம். பல்வேறு நாடுகளிலிருந்து சுமார் 1,400 இந்தியர்களை நாங்கள் அப்புறப்படுத்தி அழைத்து வந்துள்ளோம். ‘முதலில் அண்டை நாடுகள்’ என்ற எங்களின் கொள்கையின்படி, உங்கள் நாடுகளைச் சேர்ந்த சிலரையும் நாங்கள் காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறோம்.
வெளிநாடுகளில் பணி அமர்த்தப்பட்டுள்ள எங்களது நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் பரிசோதனைகளை மேற்கொள்ளுதல், பாதிக்கப்பட்டவர்களை அப்புறப்படுத்துதல் போன்ற நடைமுறையையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
இந்தியாவில் இருக்கும் மற்ற நாட்டு குடிமக்கள் குறித்த சம்பந்தப்பட்ட நாடுகளின் கவலைகளையும் நாங்கள் உணர்ந்துள்ளோம். எனவே நாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து வெளிநாட்டு தூதர்களுக்கு விளக்கி இருக்கிறோம்.
மேன்மை தங்கியவர்களே,
இன்னும் நாம் தெளிவற்ற நிலையில் இருக்கிறோம் என்பதை நாம் முழுமையாக உணர்ந்துள்ளோம். நமது பெரும் முயற்சிகளுக்கு இடையே, இந்த நிலைமை எப்படி முடிவுக்கு வரும் என்பதை நம்மால் உறுதியாகக் கூறமுடியாத நிலையில் இருக்கிறோம். நீங்களும் இது போன்ற கவலைகளை எதிர்கொண்டு இருப்பீர்கள். ஆகவேதான் நமது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நம் அனைவருக்கும் மதிப்புமிக்க தளமாக இது இருக்கும்.
உங்கள் கருத்துக்களைக் கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் நன்றி