மாண்புமிகு பிரதமர் அல்பானீஸ், பிரதமர் கிஷிடா மற்றும் அதிபர் பைடன் அவர்களே,
இன்று இந்த குவாட் உச்சி மாநாட்டில் எனது நண்பர்கள் மத்தியில் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஒரு முக்கியமான தளமாக குவாட் குழு தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியமானது உலகளாவிய வர்த்தகம், புதுமை மற்றும் வளர்ச்சியின் இயந்திரம் என்பதில் சந்தேகமில்லை. இந்தோ-பசிபிக்கின் பாதுகாப்பும் வெற்றியும் பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, உலகிற்கும் முக்கியமானது என்பதை நாங்கள் ஒருமனதாக ஒப்புக்கொள்கிறோம். ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளுடன் நாம் முன்னேறுகிறோம்.
நமது கூட்டு முயற்சிகள் மூலம் சுதந்திரமான வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பற்றிய நமது பார்வைக்கு நடைமுறை வடிவங்களை வழங்குகிறோம். பருவநிலை நடவடிக்கை, பேரிடர் மேலாண்மை, தொழில்நுட்பங்கள், நம்பகமான விநியோகச் சங்கிலி, சுகாதாரப் பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் நமது நேர்மறையான ஒத்துழைப்பு வளர்ந்து வருகிறது. பல நாடுகளும் குழுக்களும் தங்கள் இந்தோ-பசிபிக் பற்றிய பார்வையை எண்ணங்களை அறிவித்து வருகின்றன. இன்றைய நமது கூட்டம் இந்த முழுப் பிராந்தியத்தின் அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.
உலக நலன், மனித நலன், அமைதி மற்றும் செழுமைக்காக குவாட் தொடர்ந்து பணியாற்றும் என்று நம்புகிறேன். வெற்றிகரமான இந்த உச்சிமாநாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள பிரதமர் அல்பனீஸை நான் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன். 2024ஆம் ஆண்டில் குவாட் தலைவர்கள் உச்சிமாநாட்டை இந்தியாவில் நடத்த இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
நன்றி
இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பு. உரை இந்தியில் வழங்கப்பட்டது.