இந்த நிகழ்ச்சிக்கு ஆசிர்வாதம் வழங்கிக்கொண்டிருக்கும் பாபாசாகிப் புரந்தரே ஜி, பாபாசாகிப் சத்கர் சமாரோவின் தலைவர் சுமித்ரா மற்றும் சிவ்சாஹி மீது நம்பிக்கை கொண்ட பாபாசாகிப்பின் சீடர்கள் அனைவருக்கும் வணக்கம்!
சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் லட்சியங்களை பயிற்சி செய்யும் வலிமையை எனக்கு கடவுள் வணங்கவேண்டும் என்று சிவ்சாஹிர் பாபாசாகிப் புரந்தரேவை நான் வணங்குகிறேன்.
பாபாசாகிப் புரந்தரேயின் நூற்றாண்டு விழாவையொட்டி எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன். நமக்கு அவர் நீண்டகாலத்துக்கு வழிகாட்டி, ஆசி வழங்குவார் என நான் நம்புகிறேன்.இந்த சிறப்பு நிகழ்ச்சிக்காக சுமித்ராதாய் அவர்களுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன். பாபாசாகிப்பின் அருளாசிகளைப் பெறுவதற்கு வாய்ப்பு வழங்கிய உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடுமுழுவதும் உள்ள அவரது சீடர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நண்பர்களே, நீண்டகாலம் வாழ்வதற்கு மிகவும் தூய்மையான, நேர்மறையான சிந்தனைகள் அவசியம் என நமது வேதங்கள் குறிப்பிடுகின்றன. அதிலும் நூறு ஆண்டுகாலம் வாழ்வது நற்சிந்தனையின் பலனாகும். பாபாசாகிப்பின் வாழ்க்கை நமது புனித துறவிகளின் லட்சியங்களைப் பிரதிபலிக்கிறது.நாட்டின் 75 வது சுதந்திரதின ஆண்டில் தமது 100-வது வயதை எட்டியுள்ள பாபாசாகிப்பின் தவவாழ்க்கைக்கு அன்னை பாரதியின் அருள் பூரணமாகக் கிட்டியுள்ளது காரணமாகும்.
சகோதர, சகோதரிகளே, நாட்டின் 75-வது சுதந்திர தின ஆண்டு இத்துடன் சேர்ந்திருப்பது மிகப் பொருத்தமானதாகும். சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவின் கொண்டாட்டத்தில் விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தைப் போற்றும் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். பாபாசாகிப் இந்த நற்பணியை பல தசாப்தங்களாக செய்து வருகிறார். இதற்காக அவர் தமது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்துள்ளார். சிவாஜி மகாராஜாவின் வரலாற்றை மக்களுக்கு தெரியப்படுத்தியதற்காக நாம் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவரது பங்களிப்புக்கு நாடு தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது. 2019-ம் ஆண்டு நாடு அவருக்கு பத்மவிபூஷண் விருது வழங்கி பெருமைப்படுத்தியது. 2015-ம் ஆண்டு மகாராஷ்டிரா அரசு அவருக்கு மகாராஷ்டிரா பூஷண் விருது வழங்கி கவுரவித்தது. மத்தியப்பிரதேச அரசும் இந்த சத்ரபதி சிவாஜியின் தொண்டருக்கு காளிதாஸ் விருது வழங்கியது.
நண்பர்களே, சத்ரபதி சிவாஜி மீது புரந்தரே கொண்டிருந்த அபிமானத்துக்கு காரணம் இல்லாமல் இல்லை. சிவாஜி மகாராஜா இந்திய வரலாற்றில் கோலோச்சியது மட்டுமல்லாமல், தற்போதைய இந்திய புவியியலுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தினார். சிவாஜி மகாராஜா மட்டும் இல்லாவிட்டால், நமது நிலை மட்டும் என்னவாக இருந்திருக்கும் என்று கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் கற்பனை செய்யமுடியாத கேள்வியாகும். சிவாஜியின் காலத்தில் அவர் ஆற்றிய பங்கு அவரது காலத்திற்கு பின்னரும் அடையாளமாகத் திகழ்கிறது. சிவாஜி மகாராஜாவின் ‘ஹிந்துவி சுவராஜ்’ பின்தங்கிய, நலிவடைந்த பிரிவினருக்கு நீதி வழங்கும் சிறந்த நிர்வாகத்திற்கு தனித்துவ உதாரணமாகவும், கொடுங்கோன்மைக்கு எதிராகவும் திகழ்கிறது. வீர சிவாஜியின் மேலாண்மை, கடல்சார் அதிகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டது, கடற்படையைப் பயன்படுத்தியது, நீர் மேலாண்மை, மேலும் பல விஷயங்கள் இன்னும் பின்பற்றத்தக்கவையாக உள்ளன. சிவாஜி மகாராஜாவின் முன்னோக்கு பார்வையை இன்றைய சுதந்திர இந்தியாவின் இளைய சமுதாயத்தினருக்கு அறிமுகப்படுத்தியதில் பாபாசாகிப்புக்கு முக்கிய பங்கு உள்ளது.
சிவாஜி மகாராஜா மீதான அவரது அசைக்கமுடியாத பக்தி அவரது எழுத்திலும், நூல்களிலும் பிரதிபலிக்கிறது. பாபாசாகிப் சிவாஜி தொடர்பான கதைகளை அவர் விவரித்துள்ள விதம் நமது நெஞ்சை விட்டு அகலாதவையாகும். அகமதாபாத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு உங்களது நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது நான் தவறாமல் கலந்து கொண்டிருக்கிறேன். அவரது ஜாந்தா ராஜா என்ற நாடகம் புனேயில் நடந்த போது நான் அதற்காகவே சென்றிருக்கிறேன்.
பாபாசாகிப் எப்போதும் உண்மையான வரலாறு இளைஞர்களைச் சென்றடைவதையும், அவர்களை ஊக்குவிக்கும் விதத்தையும் நோக்கமாகக் கொண்டுள்ளார். இந்த சமன்பாடு நாட்டின் வரலாற்றுக்கும் பொருத்தமாகும். இதே விதமான தரத்தை பின்பற்ற வேண்டும் என்று நான் இளம் வரலாற்று ஆசிரியர்களைக் கேட்டுக்கொள்கிறேன். இந்திய விடுதலைப்போராட்டத்தின் வரலாற்றை சுதந்திரத்தின் அமிர்த பெருவிழாவையொட்டி எழுதும்போது அதிகாரப்பூர்வமான தகவல்கள் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.
நண்பர்களே, வரலாற்றை அதன் உண்மையான வடிவில் கொடுப்பதுடன், பாபாசாகிப் புரந்தரேவின் முயற்சிகள் முற்றுப்பெறவில்லை. சிவாஜி மகாராஜாவின் லட்சியங்களை வாழ்க்கையில் பின்பற்ற அவர் முயற்சி மேற்கொண்டார். கோவா விடுதலைப்போராட்டம், தாத்ரா-நாகர் ஹவேலி போராட்டத்திலும் அவர் பங்கேற்றுள்ளார். இது நமக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.நாட்டுக்கு முன்பாக நீங்கள் முன்வைத்துள்ள சிவாஜி மகாராஜாவின் லட்சியங்கள் நூற்றாண்டுகளுக்கும் நம்மை ஊக்குவிக்கும்.
இந்த நம்பிக்கையுடன், உங்களது நல்ல ஆரோக்கியத்துக்காக அன்னை பவானியின் பாதத்தில் எனது பிரார்த்தனைகளை நான் வைக்கிறேன். உங்களது ஆசிகள் எங்களுக்கு தொடரும் என்ற உறுதியுடன், வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு எனது உரையை நிறைவு செய்கிறேன். நன்றி!