தேசிய அளவிலான 2023 சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் போது, காணொளி செய்தி வாயிலாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார். 9-வது சர்வதேச யோகா தினம் 2023ஐ முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற தேசிய அளவிலான கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு குடியரசு துணைத் தலைவர் திரு ஜெகதீப் தன்கர் தலைமையேற்றார்.
காணொளி செய்தி மூலம் உரையாற்றிய பிரதமர், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல் இந்த வருடம் பல்வேறு பணிகளின் காரணமாக அமெரிக்காவிற்குத் தாம் பயணம் மேற்கொண்டிருப்பதால் காணொளி செய்தி மூலம் மக்களுடன் உரையாற்றுவதாக விளக்கமளித்தார்.
ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் இந்திய நேரப்படி மாலை 5:30 மணிக்கு நடைபெற உள்ள யோகா நிகழ்ச்சியில் தாம் கலந்து கொள்ளவிருப்பதாக அறிவித்த பிரதமர், “இந்தியாவின் அழைப்பை ஏற்று இதுவரை இல்லாத அளவில் 180க்கும் அதிகமான நாடுகள் இணைந்திருப்பது வரலாற்றுச் சிறப்புமிக்கது” என்று கூறினார். கடந்த 2014-ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினம் மூலம் யோகாவை உலகளாவிய இயக்கமாகவும், சர்வதேச உணர்வாகவும் மாற்றுவது தொடர்பாக ஐ.நா பொது சபையில் யோகா தினம் அனுசரிப்பது குறித்த முன்மொழிவு முன்வைக்கப்பட்ட போது ஏராளமான நாடுகள் அதற்கு ஆதரவளித்ததை பிரதமர் நினைவுகூர்ந்தார்.
யோகா தினத்தை மேலும் சிறப்பானதாக்கும் 'யோகாவின் பெருங்கடல் வளையம்’ என்ற கருத்தை சுட்டிக் காட்டிய பிரதமர், யோகாவின் தாத்பரியம் மற்றும் பெருங்கடலின் நீட்சிக்கு இடையேயான பரஸ்பர தொடர்பின் அடிப்படையில் இது அமைந்திருப்பதாகக் கூறினார். நீர் வளங்களைப் பயன்படுத்தி ராணுவ வீரர்கள் யோக பாரத்மாலா மற்றும் யோக சாகர்மாலா அமைத்தது பற்றியும் அவர் பேசினார். அதேபோல ஆர்டிக் முதல் அண்டார்டிகா வரையிலான இந்தியாவின் இரண்டு ஆராய்ச்சி தளங்கள் அமைந்துள்ள பூமியின் இரண்டு துருவங்கள் கூட யோகாவினால் இணைக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். நாடு மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் இந்த தனித்தன்மை வாய்ந்த கொண்டாட்டங்களில் பெருமளவு கலந்து கொண்டிருப்பது, யோகாவின் புகழை எடுத்துரைக்கிறது என்றார் அவர்.
“யோகா நம்மை இணைக்கிறது”, என்று துறவிகளை மேற்கோள் காட்டி பிரதமர் விளக்கினார். ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் தான் என்ற கருத்தின் விரிவாக்கம் தான் யோகா பற்றிய விழிப்புணர்வு என்று அவர் மேலும் தெரிவித்தார். ‘ஒரு பூமி, ஒரு குடும்பம் ஒரு எதிர்காலம்' என்ற கருப்பொருளுடனான இந்தியா தலைமையிலான ஜி20 அமைப்பு குறித்து பேசுகையில், யோகா குறித்த பிரச்சாரம் என்பது, ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உணர்வை எடுத்துரைப்பதாகும் என்று கூறினார். “ 'வசுதைவ குடும்பகத்திற்காக யோகா’ என்ற கருப்பொருளில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து யோகா பயிற்சியை மேற்கொள்கிறார்கள்”, என்று பிரதமர் தெரிவித்தார்.
பழங்கால யோகா நூல்களை மேற்கோள் காட்டிய பிரதமர், யோகாவின் மூலமாக ஆரோக்கியம், மன உறுதி மற்றும் வலிமை கிடைப்பதாகவும், பல ஆண்டுகளாக இந்தப் பயிற்சியை முறையாக செய்பவர்கள், இந்த சக்தியை உணர்ந்திருக்கிறார்கள் என்றும் கூறினார். தனிநபர் மற்றும் குடும்ப அளவில் உடல் நலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், ஆரோக்கியமான மற்றும் ஆற்றல் வாய்ந்த சமூகத்தை உருவாக்கும் யோகாவில், கூட்டு சக்தி அதிகமாக உள்ளது என்று தெரிவித்தார். நாட்டின் கலாச்சார அடையாளத்தைப் புதுப்பித்து, தற்சார்பு இந்தியாவைக் கட்டமைக்க தூய்மை இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற பிரச்சாரங்கள் உதவி வருவதாகவும், நாடும், அதன் இளைஞர்களும் இந்த புத்துணர்விற்கு பெருமளவு பங்களித்திருப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். “இன்று நாட்டின் மனநிலை மாறியுள்ளது, மக்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கும் அது வழிவகை செய்துள்ளது”, என்று பிரதமர் கூறினார்.
ஒன்றிணைக்கும், ஏற்றுக் கொள்ளும் மற்றும் அரவணைக்கும் பாரம்பரியங்களை இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சமூக கட்டமைப்பு, அதன் ஆன்மீக உணர்வு மற்றும் கோட்பாடுகள் மற்றும் அதன் தத்துவம் மற்றும் தொலைநோக்குப் பார்வை ஆகியவை எப்போதும் வளர்த்து வந்துள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் போற்றத்தக்க வளமான பன்முகத்தன்மையை சுட்டிக் காட்டிய திரு மோடி, இந்தியர்கள் புதிய சிந்தனைகளுக்கு ஆதரவளித்து, அவற்றைப் பாதுகாக்கிறார்கள் என்று தெரிவித்தார். இதுபோன்ற உணர்வுகளை வலுப்படுத்தி, சக உயிரினம் மீதான அன்பின் அடிப்படையில் ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் உள்ளுணர்வுடன் நம்மை இணைத்து, உள்ளார்ந்த பார்வையை யோகா விரிவுபடுத்துகிறது என்று அவர் தெரிவித்தார். எனவே, யோகா மூலமாக நமது முரண்பாடுகள், தடைகள், எதிர்ப்புகளை நாம் நீக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார். “ 'ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வை உலகிற்கு எடுத்துக்காட்டாக நாம் முன் வைக்க வேண்டும்”, என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தமது உரையின் நிறைவு பகுதியில், யோகா குறித்த ஸ்லோகத்தை மேற்கோள் காட்டி, செயல் திறன் தான் யோகா என்று பிரதமர் தெரிவித்தார். விடுதலையின் அமிர்த பெருவிழாவில் இந்த தாரக மந்திரம் அனைவருக்கும் அவசியம் என்று வலியுறுத்தி, ஒருவர் தமது பணிகளை மிகுந்த அர்ப்பணிப்புடன் செய்யும்போது யோகா முழுமை பெறுகிறது என்று அவர் கூறினார். யோகாவினால் நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தி இந்த உறுதிப்பாடுகளை உள்வாங்கிக் கொள்வோம் என்ற தமது நம்பிக்கையை வெளிப்படுத்தி, “யோகாவின் மூலம் தன்னலமற்ற செயலை நாம் அறிகிறோம், கர்மா முதல் கர்மயோகா வரையிலான பயணத்தை நாம் முடிவு செய்கிறோம்” என்று திரு மோடி கூறினார். “நமது உடல் வலிமையும், மன வளர்ச்சியும் தான் வளர்ந்த இந்தியாவின் அடித்தளமாக விளங்கும்” என்று தெரிவித்து பிரதமர் உரையை நிறைவு செய்தார்.