வடகிழக்கில் உள்ள ஏழு மாநிலங்களில் நடைபெறும் கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாற்றினார். கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியின் சின்னமான வண்ணத்துப்பூச்சி வடிவில் உள்ள ‘அஷ்டலட்சுமி’யை பிரதமர் எடுத்துரைத்தார். வடகிழக்கு மாநிலங்களை 'அஷ்டலட்சுமி' என்று அடிக்கடி அழைக்கும் பிரதமர், "இந்த விளையாட்டுகளில் ஒரு பட்டாம்பூச்சியை சின்னமாக இடம் பெறச் செய்வது, வடகிழக்கின் அபிலாஷைகள் எவ்வாறு புதிய சிறகுகளைப் பெறுகின்றன என்பதற்கான அடையாளமாகும்" என்று கூறினார்.
விளையாட்டு வீரர்களுக்கு தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்த பிரதமர், குவஹாத்தியில் "ஒரே பாரதம், உன்னத பாரதம்" என்ற பிரம்மாண்ட தோற்றத்தை உருவாக்கியதற்காக அவர்களைப் பாராட்டினார். "முழு மனதுடன் விளையாடுங்கள், அச்சமின்றி விளையாடுங்கள், உங்களுக்காகவும் உங்கள் அணிக்காகவும் வெற்றி பெறுங்கள், நீங்கள் தோற்றாலும் கவலைப்பட வேண்டாம். ஒவ்வொரு பின்னடைவும் கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு" என்று பிரதமர் கூறினார்
விளையாட்டு குறித்த மாறிவரும் சமூக உணர்வுகளை சுட்டிக் காட்டிய பிரதமர், பெற்றோரின் அணுகுமுறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை வலியுறுத்தினார், முன்பு, பெற்றோர் தங்கள் குழந்தைகளை விளையாட்டில் ஈடுபடுத்தத் தயங்கினர், அது அவர்களை கல்வியிலிருந்து திசைதிருப்பும் என்று அஞ்சினர். மாநில, தேசிய அல்லது சர்வதேச அளவில் இந்தத் துறையில் தங்கள் குழந்தைகளின் சாதனைகள் குறித்து பெற்றோர் பெருமிதம் கொள்ளும் மனநிலை தற்போது வளர்ந்து வருவதை அவர் குறிப்பிட்டார்.
விளையாட்டு வீரர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதன் மற்றும் கௌரவிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர் மோடி, "கல்வி சாதனைகள் கொண்டாடப்படுவதைப் போலவே, விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் பாரம்பரியத்தை நாம் உருவாக்க வேண்டும்" என்று கூறினார். கால்பந்து முதல் தடகளம் வரை, பேட்மிண்டன் முதல் குத்துச்சண்டை வரை, பளுதூக்குதல் முதல் சதுரங்கம் வரை அனைத்துத் துறைகளிலும் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வடகிழக்கு பிராந்தியத்தின் வளமான விளையாட்டு கலாச்சாரத்திலிருந்து அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
உலக விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் வெற்றியை பிரதமர் திரு மோடி பெருமிதத்துடன் பகிர்ந்து கொண்டார். உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் உட்பட பல்வேறு போட்டிகளின் குறிப்பிடத்தக்க சாதனைகளை மேற்கோள் காட்டி, சர்வதேச அரங்கில் போட்டியிடுவதற்கான இந்தியாவின் திறனை அவர் பாராட்டினார்.
விளையாட்டு மூலம் பெற்ற மதிப்புகள் குறித்து பேசிய பிரதமர், "விளையாட்டுத் துறையில் வெற்றி பெற திறமை மட்டும் போதாது; மனோபாவம், தலைமைத்துவம், குழுப்பணி மற்றும் நெகிழ்வுத்தன்மை ஆகியவையும் அவசியமாகின்றன. உடல் தகுதிக்காக மட்டுமல்லாமல், அத்தியாவசிய வாழ்க்கைத் திறன்களை வளர்ப்பதற்கும் இளைஞர்கள் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டும் என்று அவர் ஊக்குவித்தார்.